வயது முதுமையாலும் உடல்நல உபாதைகளாலும் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. தற்போது உடல் நலம் குன்றியிருக்கும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தத் தகவலை பா.ஜ.கவின் தமிழக பொறுப்பாளர் முரளீதர் ராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல நாளிதழான தினத்தந்தி நாளிதழின் 75 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டும், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி டிவி.சோமநாதன் மகள் திருமண நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை வருகிறார் மோடி.
தற்போது சென்னை வந்திறங்கிய பிரதமர் மோடி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 10.30 முதல் 11.30 வரை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனையடுத்து ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில் 11.30 முதல் 12 மணி வரை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் பகல் 12.45 மணிக்கு அவர் டெல்லிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் முரளீதர்ராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், பிரதமர் மோடியின் இன்றைய தமிழக வருகையின் போது, தமிழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கச் செல்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைனையடுத்து, இன்று காலை 9 மணி அளவிலேயே விமானநிலையம் வந்து இறங்கினார் பிரதமர் மோடி. முதலில் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பின்னர் நண்பகல் 12.30 மணி அளவில் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தற்போது அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இது மோடியின் பயணத் திட்டத்தில், திட்டமிடப்படாத திடீர் மாற்றம்.
முன்னர் தி.மு.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தபோது, பிரதமர் வாஜ்பாய்க்கும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்தது.
இவர்கள் இருவரும் அரசியல் கொள்கைகளைக் கடந்தும் வேறுபாடுகளைக் கடந்தும் மிகுந்த நெருக்கம் காட்டினர். அந்த சமயத்தில் கருணாநிதியோ சூரியனைக் கண்டதும் தாமரை மலரும் என்றெல்லாம் கூறியிருந்தார்.
பிரதமர் வாஜ்பாய் ஒரு நல்ல கவிஞர், நான் ஒரு கலைஞர். நாங்கள் இருவரும் நட்புடன் இருப்பதில் வியப்பென்ன என்றும் இயங்கியவர் கருணாநிதி. எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் பண்டாரங்களின் கூடாரம் என்று பா.ஜ.கவை விமர்சித்த போதும், வாஜ்பாயுடன் தோழைமை தான் பாராட்டினார்.
இருப்பினும் பின்னர் மத்திய பா.ஜ.கவுடன் விரோதப் போக்கே நீடித்தது. இந்த நிலையில், தமிழகத்தின் தவிர்க்க முடியாத மூத்த தலைவராகத் திகழும் கருணாநிதியுடன் தற்போதைய பா.ஜ.க தலைமை அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை.
அ.தி.மு.கவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பா.ஜ.க தி.மு.கவை ஒதுக்கியே வைத்திருந்தது. அதற்கு ஊழல் இமேஜ், கொள்கை முரண்பாடுகள் என்றெல்லாம் கூட காரணம் கூறப்பட்டது.
இருப்பினும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தோழமை கொண்டிருந்த அளவிற்கு கருணாநிதி பக்கம் ஆர்வம் காட்டாதிருந்த பிரதமர் மோடி, இப்போது திடீரென அவரை சந்தித்து உடல் நலம் விசாரிக்க உள்ளார் என்பது யாருமே எதிர்பார்க்காத செய்தி.
முன்பெல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தில் வந்து உணவு அருந்த வந்த பிரதமர் மோடி, பின்னர் திடீரென தன்னுடைய நண்பர் சோ ராமசாமியை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதுபோல, இன்று வேறு பணிகளை காரணமாக வைத்து வரும் மோடி, திடீரென கருணாநிதியை சந்திக்கவுள்ளது, பிரதமரின் இமேஜை தமிழகத்தில் நிச்சயம் உயர்த்தும் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.