ஐந்து நாட்களுக்கு முன் வந்த அரசாணை..!! எந்த நகருக்கும் இல்லாத சிறப்பு, சென்னைக்கு..! ஆய்வாளர்கள் கூறுவது,

எரிமலையாக, புயலாக, கடற்சீற்றமாக, ஆழிப்பேரலையாக, அடைமழையாக, வெள்ளமாக எத்தனை வடிவங்களில் படிப்பினை கொடுத்தாலும், மனிதர்கள் நாம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம்…

ஆனால் இவற்றையெல்லாம் விட பெரிய ஆபத்து,

மக்களை காக்க வேண்டிய அரசு பிடிவாதமாக மறுத்து மக்களின் உயிரோடும் உடமைகளோடும் நடத்துகிற அலட்சிய விளையாட்டு தான் இந்நூற்றாண்டின் மிகப் பெரிய ஆபத்து…

கடந்த 2015 ல் சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளம் முடிந்த மறுகணமே ஆரம்பித்திருக்கப்பட வேண்டிய குடி மராமத்து வேலைகளுக்கான அரசாணையை ஐந்து தினங்களுக்கு முன்புதான் அரசு வெளியிட்டிருக்கிறது….

கட்அவுட்கள் பேனர்கள் சம்பந்தமாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு இராட்சத பலூன்களில் தங்கள் புகைப்படத்தை பொறித்து,

வானுயர பறக்க விடும் அமைச்சர்கள் அந்த சிந்தனையில் பத்தில் ஒரு பங்கு செலவழித்திருந்தால் கூட சென்னையை சூழ்ந்த வெள்ளத் துயரை தடுத்திருக்க முடியும்..

சென்னையைப் போன்ற ஒரு இயற்கை அமைப்புள்ள நகரை காண்பது அரிது…ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு என்ற மூன்று ஆறுகள், அந்த ஆறுகளுக்கு மழை நீரை கொண்டு வந்து சேர்க்கும் ஐநூற்றி சொச்சம் குறுங்கால்வாய்கள்,

இவற்றையெல்லாம் இணைக்கும் மிகப் பெரும் பக்கிங்ஹாம் கால்வாய் என அற்புதமான அமைப்போடு அமைந்தது சென்னை நகர்….

அனுபவமிக்க நகரமைப்பு பொறியாளர்கள், தன்னலம் கருதாத சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் என எவற்றுக்கும் பஞ்சமில்லை..

குறுங்கால்வாய்கள், ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் (இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது) ஆகியவற்றை பாரபட்சமின்றி தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஒன்றே சென்னை துயருக்கு நிரந்தர தீர்வு…

ஆனால் அதை செய்வதற்கு மன உறுதி கொண்ட அரசாங்கம்தான் இன்றைய நமது தேவை.