கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பத்தின் இழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்செய்துள்ள பொதுநல மனுவில், “கடந்த மாதம் 23-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக கந்துவட்டிப் பிரச்னைகுறித்து இசக்கிமுத்து, தென்காசி அச்சன்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். ஆனால், காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட ஆட்சியரிடமும் உரிய நடவடிக்கை கோரி 4 முறை மனு அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த இசக்கிமுத்து, கந்துவட்டிக் கொடுமையோடு, அதனால் குடும்பத்தை நடத்த இயலாத சிரமத்துக்கும் ஆளான நிலையில், குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முழுக் காரணம், சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகளின் மெத்தனமான போக்கே. ஆகவே, தொடர்புடைய அதிகாரிகள்மீது நடவடிக்கை கோரி, தமிழக தலைமைச் செயலர், தென்மண்டல காவல்துறை தலைவர் ஆகியோரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, மெத்தனப்போக்கால் ஒரு குடும்பத்தின் இழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம்செய்து, இசக்கிமுத்துவின் உறவினர்களுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்டு அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக நெல்லை ஆட்சியர், போலீஸ்மீது நடவடிக்கை எடுப்பது பற்றி டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் மற்றும் தென் மண்டல ஐ.ஜி., ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.