சிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்ற அமெரிக்கா உதவும் – கூட்டறிக்கையில் தெரிவிப்பு

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா, தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் தோமஸ் சானொனும், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசமும், இணைந்து நேற்றிரவு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம், சட்ட ஆட்சி மற்றும் எமது நாட்டு மக்களின் வாய்ப்புவளம்  மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டினை பகிரும் வகையில், சிறிலங்கா மற்றும் அமெரிக்கா ஆகியன 2017 நவம்பர் மாதம் 6 ஆம் நாள் கொழும்பில் இரண்டாவது பங்காளித்துவ உரையாடலை நடத்தியிருந்தன.

இந்த சந்திப்பானது, வெளிவிவகார  அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலர் தோமஸ் சானொன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கூட்டு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டதுடன், வழக்கமான மறறும் கட்டமைக்கப்பட்ட சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியம், உலகம் முழுவதும் சமாதானம் மற்றும் நிலைபேற்றுநிலை நோக்கி கூட்டாக பணியாற்றுவது என இருநாட்டு அரசாங்கங்களும் தீர்மானித்துள்ளன.

அனைத்து நாடுகளும்  சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அனுபவிப்பதை உறுதிப்படுத்தக் கூடிய விதிமுறைகள் அடிப்படையிலான ஆணை, ஊக்குவிப்பு ஊடாக இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, நிலைபேற்றுநிலை மற்றும் வாய்ப்புவளம் பாதுகாக்கப்படல்  வேண்டும்  என்பதை அமெரிக்காவும் , சிறிலங்காவும் ஏற்றுக்கொண்டிருந்தன.

பிராந்திய மற்றும் அனைத்துலக ரீதியில் சமாதானம் மற்றும் நிலைபேற்றுநிலைக்கான தொலைநோக்கினை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும்  ஒப்புக்கொண்டதுடன், கடல்பயண மற்றும் வான் பயண  சுதந்திரம் மற்றும் தடையற்ற வர்த்தகம் உள்ளடங்கலாக சட்ட விதியின் அடிப்படையிலமைந்த கடற்படை ஆணையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

thomas shannon- prasad (1)

மேலும் கடற்கொள்ளை எதிர்ப்பு அளவுகோல்கள் உள்ளடங்கலாக, சமுத்திர பாதுகாப்பினை பகிர்ந்து கொள்ளல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான விருப்பையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

தீவுத்தேசம் என்ற வகையில், அதன் சொந்த எல்லைகள் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை செயற்தகு முறையில் முன்னெடுக்கக் கூடிய வகையில் கடல்சார்ந்த கொள்திறனை கட்டியெழுப்புவதற்கான தேவையை சிறிலங்கா வலியுறுத்தியுள்ளது.

பிராந்திய வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் சுதந்திரமான மற்றும் திறந்த சமுத்திரம் ஊடாக ஆசியா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்கா நாடுகள் மத்தியில் வர்த்தகப்  பாய்ச்சலை இணைக்கின்ற ஆசியாவில், வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான பிராந்திய மையமாக சிறிலங்காவை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

வர்த்தகம் , முதலீடு, வெளிநாட்டு உதவிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பங்குதாரர்களுடனான நேரடியான பங்காளித்துவம் ஊடாக சிறிலங்காவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதையும் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தையும், உறுதியான வர்த்தக உறவையும் அமெரிக்கா கொண்டுள்ளது. 2016 பெப்ரவரி மாதம் ஆரம்ப பங்காளித்துவ உரையாடல்கள் நடைபெற்றது முதல் சிறிலங்கா மற்றும் அமெரிக்க இருதரப்பு உறவுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், போதைவஸ்து எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சட்டவிதி மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்காக நிதி மற்றும் கடன் சவால்களை அடையாளப்படுத்த உதவுவதற்காக திறைசேரி மற்றும் நீதித்திட்டங்களுக்கான அமெரிக்கத்  திணைக்களங்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின்  உயர்மட்ட பிரதிநிதிகளின்  சிறிலங்கா பயணம்  மற்றும் சிறிலங்கா அதிபர் ,நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரின் அமெரிக்கப் பயணங்கள் ஆகிய ஒருசில முக்கியமான அதிகாரபூர்வ பயணங்களும் இடம்பெறறுள்ளன.

சிறிலங்காவில் வலுவான இருதரப்பு உறவுகளின் அடையாளமாக, அமெரிக்காவின் காங்கிரசின் நடவடிக்கைகள்பூர்த்தியடைந்ததும்  சிறிலங்கா கடற்படைக்கு இரண்டாவது கடலோர பாதுகாப்பு கப்பலை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த செயலாளர் வகுப்பு உயர் தரமிக்க கப்பலானது, சிறிலங்காவை அதன் கடலோரங்கள் மற்றும் தனிப்பட்ட பொருளாதார வலயத்தை திறம்பட காவல் செய்யவும், அதன் வர்த்தக மற்றும் தொடர்பாடலின் சமுத்திர எல்லையை பாதுகாக்கவும்  வழிவகுக்கும்.

மேலும் அமெரிக்காவானது, சிறிலங்காவின் ஆங்கில வகுப்புகளுக்கு அமெரிக்க அமைதிப்படை தொண்டர்களை மீள அனுப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

உற்பத்தித் திறன், பாலின் தரம், நிதி, உணவுப்  பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்தி, சிறிலங்காவின் பால் துறையை வலுப்படுத்தி நவீனமயப்படுத்துவதற்காக, விவசாய உணவுக்கான அமெரிக்க திணைக்களத்தின் முன்னேற்ற திட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள 21 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டம் குறித்தும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

thomas shannon- prasad (2)

மில்லேனிய சவால் நிறுவன ஒப்பந்தத்தின் அபிவிருத்திப் பணிகள் 2017-2018 ஆம்  ஆண்டுகளில் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப் பிரிவை நிறுவ உதவுதல், இராணுவ நிபுணத்துவ கல்வியைப் பெறுவதற்கு சிறிலங்கா படையினரை அமெரிக்காவுக்கு அனுப்புதல் , இருதரப்பு பயிற்சிகள் மற்றும் கப்பல் பயணங்கள் மற்றும் இரு நாடுகளிலுமுள்ள மிகச்சிறந்த இராணுவ அதிகாரிகளுக்கிடையிலான இருதரப்பு மற்றும் பிராந்திய மூலோபாய நலன்களுக்காக இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இருநாடுகளுமே ஒப்புக்கொண்டுள்ளன.

நீடித்த சமாதானத்தை அடைந்து கொள்வதற்கான நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல்  மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சிறிலங்காவின் உறுதிப்பாட்டினை மீள் உறுதி செய்து, 2017 மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அதன் இணை அனுசரணையை சிறிலங்காவும் அமெரிக்காவும் நினைவுப்படுத்தியது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்ட உண்மையைக் கண்டறிதல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்கள், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு பதிலளித்தல்  மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கு பொருத்தமான சீர்திருத்தங்களை செயல்படுத்தல்  ஆகிய உறுதிப்பாடுகளை செயல்படுத்ததுவதற்கு தமது ஆதரவினை சிறிலங்காவுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான ஆதரவு ஊடாக சிறிலங்கா மக்களின் விருப்பைப்  பிரதிபலிக்கும் இந்த உறுதிப்பாடுகளை செயல்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கத்தை யுஎஸ்எய்ட் வழிநடத்தவுள்ளது.

ஜனநாயகம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள், நல்லாட்சி, சட்ட விதிமுறை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்  மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதியளிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்தம், பாதுகாப்பு படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் , காணாமல் போனோருக்கான சுயாதீன மற்றும் நிலையான பணியகத்தைஅமைத்தல்  ஆகிய விடயங்களில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

சிறிலங்காவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கம் , சட்டஆட்சி மற்றும் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளுக்கிணையாக, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பும் தொடரவுள்ளது.

இதில் கண்ணிவெடிகளை அகற்றுதல், சிறிலங்கா  இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி, கப்பல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வருகை ஆகிய அமெரிக்காவின் உதவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுக்கள் தொடர்பான தமது கரிசனையை சிறிலங்காவும், அமெரிக்காவும்  பகிர்ந்து கொண்டுள்ளன.

வட கொரியாவின் சட்ட விரோதமான அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களினால் அனைத்துலக  அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்  குறித்தும், வட கொரியா மீது அனைத்து ஐ.நா உறுப்பினர்களும் அழுத்தம்  செலுத்த வேண்டியதன்  முக்கியத்துவத்துவம் குறித்தும், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களின் முழுமையான செயல்முறைப்படுத்தல்  குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

2017 ஓகஸ்ட் முதல் செப்ரெம்பர் மாதம் வரை சிறிலங்காவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்து சமுத்திர பிராந்திய மாநாடு குறித்து இருநாடுகளுமே தங்களது திருப்தியை வெளிப்படுத்தியதுடன், இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, நிலைபேற்றுநிலை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொருளாதார வாய்ப்பினை மேம்படுத்தக் கூடிய கூட்டு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும்  இணங்கியுள்ளன.

அமெரிக்காவும் , சிறிலங்காவும் தமது இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், பரஸ்பர நலன்களுக்காக அமெரிக்கா – சிறிலங்கா பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டினையும் வெளிப்படுத்தியுள்ளன.

1948 ஆம்  ஆண்டு சுதந்திரத்தைத் தொடர்ந்து சிறிலங்காவை அங்கீகரித்த   முதன்மையான ஒருசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். 2018 ஆம்  ஆண்டு சிறிலங்கா – அமெரிக்காவுக்கிடையிலான இராஜதந்திர –உறவுகளின்  70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தமது ஈடுபாடு மற்றும் பரஸ்பர ஆதரவை நோக்கிப் பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பை இரு நாடுகளும் கொண்டுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.