அமெரிக்க கடலோரக்காவல் படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.
சிறிலங்காவுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் தோமஸ் சானொன், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
வலுவான இருதரப்பு உறவுகளின் அடையாளமாகவும், சிறிலங்காவின் அமெரிக்காவின் ஈடுபாடுகளின் ஆழத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.
காங்கிரஸ் அனுமதி கிடைத்ததும் இது வழங்கப்படும். செக்ரெட்டரி வகையைச் சேர்ந்த உயர்திறன் கப்பல், சிறிலங்கா அதன் கடலோரக் பகுதியையும், சிறப்பு பொருளாதார வலயத்தையும், கடல்பாதை மற்றும் தொலைத்தொடர்பு வழியை பாதுகாக்கவும் சிறிலங்காவுக்கு உதவும் என்றும் அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க கடலோரக் காவல் படை, கரேஜஸ் என்ற போர்க்கப்பலை வழங்கியிருந்தது. அது தற்போது சிறிலங்கா கடற்படையினால் சமுத்ர என்ற பெயரில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது,