சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயை தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாது டுவிட்டர் இணையத்தளத்தில் நையாண்டி செய்த அமெரிக்கப் பெண் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி அநாமதேய டுவிட்டர் செய்தியின் பின்னணியில் குறிப்பிட்ட ஊடகவியலாளரான மார்தா ஓ டொனோவன் (25 வயது) உள்ளதாகக் குற்றஞ்சாட்டியே அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மார்தா தனது டுவிட்டர் செய்தியில் ரொபேர்ட் முகாபேயை (93 வயது) சுயநலமும் நோயால் பீடிக்கப்பட்டு சிறுநீரை அகற்றும் குழாயில் தங்கியுள்ள ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ள இணையத்தள முகவரியை புலனாய்வு செய்து அதனூடாக அவரையும் அவரது வீட்டையும் பொலிஸார் கண்டுபிடித்ததாக பொலிஸ் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
அவர் மீதான குற்றச்செயல் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் 20 வருட சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மகம்பா தொலைக்காட்சி வலைப்பின்னலில் பணியாற்றும் மார்தா, கடந்த பல வருடங்களாக ஆபிரிக்காவெங்கும் மனித உரிமைகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அவர் அந்நாட்டிலுள்ள சர்ச்சைக்குரிய சிக்குருபி அல்லது ஹரரே மத்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை அவர்தொடர்பான மேன்முறை யீடொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.