வெள்ளம் மற்றும் வரட்சி காரணமாக விவசாயத்தில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் கட்டடத் தொழிற்றுறையிலும் வெளியகத் துறைகளிலும் ஏற்பட்ட பெரும் தாக்கம் காரணமாக 2017 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டுப் பகுதியில் இலங்கையின் வளர்ச்சியானது 3.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன் குறிப்பிடத்தக்க சவால்கள் காணப்பட்டபோதிலும் 2017இல் இலங்கை பரந்தளவில் திருப்திகரமான பொருளாதார செயற்றிறனைக் காண்பிக்கின்றதுடன் 2017 க்குள் பொருளாதார வளர்ச்சியானது 4.6 சதவீதத்தை அடைந்து நடுத்தர காலத்திற்குள்ளாக 5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் அரையாண்டு பொருளாதார நிலவரம் குறித்து உலக வங்கி அண்மையில் இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப்பணிப்பாளர் ஐடா ஸ்வராய் மற்றும் உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சிரேஷ்ட வதிவிட பொருளியலாளர் ரல்ப் வன் டூர்ண் ஆகியோர் பொருளாதாரம் குறித்த விளக்கங்களை அளித்தனர். இதன்போது மேற்கண்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
முதலில் இலங்கை பொருளாதாரம் குறித்த உலக வங்கியின் நிலவர அறிக்கையில் உள்ள சாராம்சங்களை பார்ப்போம். பொருளாதார வளர்ச்சியை நிலைபேறானதாக வைத்திருப்பதற்கும் தொழில்களை உருவாக்குவதற்கும் வறுமையைக் குறைப்பதற்கும் இலங்கை மேலும் அதிகமான தனியார் முதலீடுகளை நோக்கியும் வர்த்தகம் செய்யக்கூடியதான துறைவழி வளர்ச்சி மாதிரியை நோக்கியும் நகர்வது அவசியமாகும்.
அபிவிருத்திக்கான அதிகமான வாய்ப்புக்களை திறந்துவிடுவதுடன் புதிய வளர்ச்சி மாதிரியை நோக்கிய இலங்கையின் மாற்றத்திற்கு சிறப்பான இடர்முகாமைத்துவமானது ஒத்துழைத்து வழிகோலும் என்பதற்கானவலுவான தர்க்கத்தைஇந்த அபிவிருத்தி நிலவர அறிக்கை முன்வைக்கின்றது.
குடும்பங்கள், நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த இடர்களை நன்றாக முகாமைத்துவம் செய்வது அவசியமாகும்.
வெள்ளம் மற்றும் வரட்சி காரணமாக விவசாயத்தில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் கட்டடத் தொழிற்றுறையிலும் வெளியகத் துறைகளிலும் ஏற்பட்ட பெரும் தாக்கம் காரணமாக 2017 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டுப் பகுதியில் இலங்கையின் வளர்ச்சியானது 3.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
மொத்த தேசிய உற்பத்தியுடன் பார்க்கையில் (2016ல் 79.3 சதவீதம்) ஒப்பீட்டளவில் அதிகமான பொதுக்கடன் காணப்படுகின்றமை அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அரச முகவரமைப்புக்களிற்கு வழங்கப்படுகின்ற திறைசேரி உத்தரவாதங்கள் (2016இல் மொத்த தேசிய உற்பத்தியில் 7.1 சதவீதம்) ஆகியவற்றினால் நிதி அபாயங்களானது 2017 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும் தொடர்ந்தும் உயர்வானதாகவே காணப்பட்டது.
குறிப்பிடத்தக்க சவால்கள் காணப்பட்டபோதிலும் 2017இல் இலங்கை பரந்தளவில் திருப்திகரமான பொருளாதார செயற்றிறனைக் காண்பிக்கின்றதுடன் 2017க்குள் பொருளாதார வளர்ச்சியானது 4.6சதவீதத்தை அடைந்து நடுத்தர காலத்திற்குள்ளாக 5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
2017 மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பிபிளஸ் வர்த்தக வரிச்சலுகையை இலங்கை மீளப் பெற்றுக்கொண்டது. இதேவேளை இலங்கை அரசாங்கமானது பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் புதியதொரு உள்நாட்டு வருமான சட்டத்தை நிறைவேற்றியமையானது முக்கிய அம்சமாக அமைந்துள்ளது என்று நிலவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப்பணிப்பாளர் ஐடா ஸ்வராய் இலங்கையின் பொருளாதாரம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
‘இலங்கை அதன் தூரதரிசனப்பார்வையாக இலட்சிய வேட்கையுடன் வெளியிட்டுள்ள “நோக்கம் 2025” இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மேல் நடுத்தர வருமான நிலையை ஈட்டும் பயணமானது நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையிலும் நாட்டிலுள்ள மிகவும் நலிவடைந்த தரப்பினரில் அதிகமானவர்களை ஒதுக்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்துகொண்டு ஏற்றுமதியை தலைமையாகக் கொண்டுள்ள வளர்ச்சி மாதிரியை முன்னெடுத்துச் செல்கின்ற இயலுமையிலும் தங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறு இருக்க ‘இந்த மாற்றமானது அதற்குரித்தான அபாயங்களையும் வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது. இது பலபேரண்டப் பொருளாதார அபாயங்கள் தொடர்பில் இலங்கையை மேலும் நெகிழ்வுடையதாகமாற்றும். ஆனால் புதியவற்றிற்கு ஆட்படுத்தும்.’ என உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சிரேஷ்ட வதிவிட பொருளியலாளாரும் இந்தஅறிக்கையின் படைப்பாளர்களில் ஒருவருமான ரல்ப் வன் டூர்ண் தெரிவித்தார்.
‘அடிக்கடி அதிகரித்துவருகின்ற இயற்கை அனர்த்தங்கள் மென்மேலும் தயாராகவிருக்க வேண்டியதன் அவசியத்தை கோரிநிற்கின்றது. சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இடர் அபாயங்களை நன்கு முகாமைத்துவம் செய்வது முக்கியமானதாகும். பேரண்ட நிதியத்தில் ஸ்திரத்தன் மையைப் பேணுதல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அதன் தயார்நிலைத்தன்மையை அதிகரித்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக இலங்கை அதன் இலக்கை அடைந்து கொள்ளமுடியும். என இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைதொடர்பில் உலக வங்கியின் அவதானிப்பைமேற்கொண்ட வன்டூர்ண் குறிப்பிட்டுள்ளார்.