தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சண்டையில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ் உரும்பிராய்ப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கூடுதலான பணம் மற்றும் நகைகள் வீடு ஆகியவற்றை சீதனமாக கொடுத்து அரச உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடித்துள்ளார் பெண் ஒருவர். குறித்த பெண்ணின் அக்காவின் கணவனும் அரச உத்தியோகத்தராவார். அக்காவும் தங்கையும் மட்டுமே இங்கு உள்ளார்கள். ஏனைய சகோதரர்கள் வெளிநாட்டில் வாழ்வதாகத் தெரியவருகின்றது. அத்துடன் குறித்த இரு சகோதரிகளின் தகப்பனார் பிரபல வர்த்தகர் ஆவார்.
தனது மனைவியின் தங்கைக்கு தனக்கு கொடுத்ததை விட அதிக அளவு சீதனம் கொடுத்து கலியாணம் நடந்த முற்பட்ட போது கணவன் அதை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். தன்னை விட குறித்த மாப்பிளை பதவி அந்தஸ்தில் குறைந்தவர் என கூறி சீதனத்தை குறைக்க முற்பட்டும் மாமனார் அதற்கு உடன்படாது கூடிய அளவு சீதனம் கொடுத்து தனது இரண்டாவது மகளின் திருமணத்தை முடித்துள்ளார்.
இதனால் கோபமுற்ற அக்காவின் கணவன் கலியாணவீட்டுக்கும் செல்லவில்லை என தெரியவருகின்றது. அத்துடன் திருமண வீட்டுக்குச் சென்று வந்த தனது மனைவியையும் கடுமையாகத் தாக்கியதாகவும் இதனால் தலையில் காயமடைந்த மனைவி யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக மனைவியிடம் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்ட போது தான் நிலத்தில் வீழ்ந்து காயமேற்பட்டதாக மனைவி கூறியதாக குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.