மோடி கருணாநிதியை சந்தித்தது இதற்காகத்தான் : பகிரங்கமாக போட்டுடைத்த கொறடா!

பிரபல நாளிதழான தினத்தந்தி பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதன் மகள் திருமண விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மோடி- கருணாநிதி சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி கூறியதாவது:

13 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மற்றும் 5 முறை முதல்வராக இருந்தவர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு வரும் தேசிய தலைவர்கள் அனைவரும் அவரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்.

அது போலவே மரியாதை நிமித்தமாக தான் மோடியும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதனை நாம் அரசியல் ரீதியாக பார்க்க முடியாது.

கொள்கைகளை கைவிடாத காரணத்தினால் தான் தி.மு.க இன்று இந்தளவிற்கு முன்னேறி இருக்கிறது. தமிழர்களின் நலன் காக்கும் நோக்கோடுதான் தி.மு.க தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் இடத்தில்தான் தி.மு.க இருக்கிறது. கருணாநிதியை மோடி சந்தித்ததால் தி.மு.கவை பா.ஜ.க நெருங்குகிறது என்றும் கூற முடியாது.

தி.மு.கவின் கோரிக்கையை ஏற்று செம்மொழி அந்தஸ்தை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அளித்தது.

இன்று அந்த செம்மொழி உள்ளிட்ட தி.மு.க கொண்டு வந்த பல்வேறு விஷயங்களுக்கு மூடுவிழா காண மத்திய பா.ஜ.க அரசு துடிக்கிறது. இப்படி இருக்கும்போது தி.மு.க பா.ஜ.கவோடு எந்த நெருக்கமும் வைத்துக்கொள்ளாது.

பா.ஜ.கவிற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது. அந்த எதிர்ப்பை குறைக்க இந்த சந்திப்பை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். டெல்லி பா.ஜ.க கையில்தான் அ.தி.மு.க அரசு உள்ளது என்ற குற்றச்சாட்டுள்ளது.

அதனை மறைக்க, நாங்கள் தி.மு.கவோடும் நல்லுறவோடு உள்ளோம் என்றும் காட்டிக்கொள்ள இந்தச் சந்திப்பை பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.