இத்தாலிக்கு அப்பாலான கடற்பரப்பில் 26 இளம்பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணையை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறும் மோதல் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரி குடியேற்றவாசிகள் சென்றவண்ணமுள்ளதுடன், இவர்களின் ஆபத்தான கடற்பயணம் காரணமாக சிலவேளைகளில் படகுகள் நீரில் மூழ்கி உயிரிழப்புச் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடலிலிருந்து, 26 பேரின் சடலங்களை இத்தாலிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். நைஜீரியாவைச் சேர்ந்த 14 முதல் 18 வயதுவரையானவர்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. எனவே, இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, குடியேற்றவாசிகள் ஐவரிடம் இது தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.