வயது முதிர்ந்த ஆண்களைத் திட்டமிட்டுக் காதலித்து, அவர்களது காப்புறுதிப் பணத்துக்கு உரித்துப் பெற்றபின் அவர்களை சயனைட் கொடுத்துக் கொலை செய்து வந்த பெண்ணுக்கு ஜப்பானிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சிஸாக்கோ காகேஹி (70) என்ற பெண்ணுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரை ‘விஷப் பெண்’ என்றும் ‘சூனியக்கார விதவை’ என்றும் ஜப்பானியர்கள் அழைக்கிறார்கள்.
முதல் திருமணம் உட்பட இதுவரை நான்கு முறை திருமணம் செய்தவர் காகேஹி. டேட்டிங் இணையதளங்களில், வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட, சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமேயில்லாத ஆண்களையே காகேஹி குறிவைத்துத் திருமணம் செய்துகொண்டார்.
சொல்லிவைத்தாற்போல், ஒவ்வொரு ஆணின் காப்புறுதிப் பணத்துக்கும் பொறுப்பாளராக காகேஹி நியமிக்கப்பட்ட ஓரிரு தினங்களில் அவர்கள் கொல்லப்பட்டு வந்தனர்.
கொல்லப்பட்டவர்களது உடற்கூற்று அறிக்கையில் சயனைட் மற்றும் அதற்கு நிகரான விஷப் பொருட்கள் காணப்பட்டதை பொலிஸார் அவதானித்தனர்.
காகேஹியின் நான்காவது கணவரும் மர்மமான முறையில் இறந்ததையடுத்து, 2013ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் காகேஹியைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
ஆரம்ப விசாரணையின்போது மௌனம் காத்த காகேஹி, நான்காவது கணவரைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். எனினும், தனது காதலிகளுக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்த அவர் தனக்கு ஒரு யென்னையேனும் தராததாலேயே கொலை செய்ததாகக் கூறியிருந்தார்.
எவ்வாறெனினும், காகேஹியின் வீட்டுக் குப்பைகளில் சயனைட் அடங்கிய சாடிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விரைவில் இத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காகேஹி முறைகேடாகச் சேர்த்த பணம் பல மில்லியன் டொலர்கள். என்றபோதும், அந்தப் பணத்தை நேர்த்தியாக வியாபாரத்தில் பயன்படுத்தத் தெரியாததால், தற்போது காகேஹி பணப் பற்றாக்குறையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.