மனைவி கொடூரமாக சித்திரவதை! நேரலை செய்த நபர்!

ஜேர்மனியில் தமது மனைவியை கொடூரமாக சித்திரவதை செய்வதை அவரது பெற்றோருக்கு வெப்கேமில் நேரலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் ககன்தீப்(35) மற்றும் அவரது சகோதரர் அமன்தீப்(21) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் முனிச் நகரில் ககன்தீப் தமது மனைவி தல்ஜீத் வீட்டாரிடம் இருந்து அதிக வரதட்சினை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று தல்ஜீத் தமது பேஸ்புக் பக்கத்தில் ’காதல் தொடர்ந்து நீடிக்கும். உன்னால் எனது வாழ்க்கை சிறப்புற்றது’ என பதிவிட்டிருந்தார்.

அதன் அடுத்த நாள் இரவு உல்ளூர் நேரப்படி 11 மணி அளவில் இந்தியாவில் டெல்லியில் குடியிருக்கும் தல்ஜீத்தின் பெற்றோரை வெக்கேம் நேரலையில் அழைத்த ககன்தீப், தமது சகோதரருடன் இணைந்து மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது நிலைகண்டு பொறுக்கமுடியாத குடும்ப உறுப்பினர் ஒருவர் அவரது நண்பர் வழியாக பொலிசில் தொடர்பு கொண்டுள்ளனர்.

முனிச் நகரில் உள்ள குடியிருப்பில் பொலிசார் வந்து சேர்வதற்குள் தல்ஜீத் அங்கிருந்து தப்பியுள்ளார்.

தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசாருக்கு, சாலையில் உதவி கேட்டு யாசிக்கும் தல்ஜீத் சிக்கினார்.

இதனிடையே மனைவி மாயமானது தெரிந்தும் சகோதரருடன் இணைந்து ககன்தீப் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். இருவரையும் கைது செய்த பொலிசார் துன்புறுத்துதல், மிரட்டல் விடுத்தல், கொள்ளையடிக்க முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், தல்ஜீத்தின் பெற்றோர் வரதட்சினையாக 50,000 யூரோ வழங்க ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் இதுவரை அந்த தொகையை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வீரராக பணி புரியும் ககன்தீப், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனி வந்துள்ளார். முனிச் அருகே Ismaning பகுதியில் குடியிருக்கும் இவர் கடந்த ஆண்டு இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் உள்ள தல்ஜீத் என்பவரை திருமணம் செய்துள்ளார்.