பெற்றோலை சரியாக பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம் எப்படி அதிகாரத்தை பகிர்ந்தளிக்க போகின்றது? வடக்கு மக்கள் பெரும் கஷ்டப் படும்போது அன்று வேலுப்பிள்ளை பிரபாகரன் மிகவும் சொகுசாக வாழ்ந்தார். அவரும் தனக்கான அதிகாரத்திற்காகவே போராடினார். எனினும் அன்று பிரபாகரன் நினைத்திருந்தால் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கியே ஆக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது நாம் அதிகாரத்தை பகிர்வது பற்றி பேசுகின்றோம். எனினும் நாட்டில் எரிபொருள் தட்டுபாட்டினால் பொது மக்கள் பெருமளவில் கஷ்டப்படுகின்றனர். எனவே பெற்றோலை பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கத்தினால் எப்படி அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முடியும்?
புதிய அரசியலமைப்பினை பற்றி பேசும் போது இலங்கையில் உருவாக்கப்பட்ட இரு அரசியலமைப்பு தயாரிப்பின் போது மக்களுக்கு முன்னிலை வழங்கப்பட்டது. அதிகாரத்தை பகிரும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகள் எதுவும் இல்லை. யாழ்ப்பாண மக்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும். அவர்களுக்கான வசதிகளையும் உதவிகளையும் கட்சி அல்லாமல் மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். வடக்கு மக்கள் தமக்கு அதிகாரத்தை கோரவில்லை. அவர்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்க்குமாறே கோரினர். எனினும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகாக அதிகாரங்களை வழங்குவதில் பயனில்லை.
நாம் யாழ்ப்பாண மக்களுக்கு அனைத்து உரிமைகள் வழங்கினோம். நாட்டு மக்கள அரசியலமைப்பினை கோரவில்லை. அரசியலமைப்பு சர்வதேசத்தவர்களுக்கே தேவையாக உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர் அமெரிக்காவுக்கு சென்ற போது அம்பாந்தோட்டை துறைமுகம் பற்றி கோரினர். நீண்ட காலம் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பினை வெளியிட்டனர். அதன்பின்னர் யாழ்ப்பாணத்தை பற்றி பேசினர். அரசியலமைப்பு பற்றி பேசினர். எனவே புதிய அரசியலமைப்பு அமெரிக்காவுக்கே தேவையாக உள்ளது.
ஏன் அதிகாரத்தை பகிர வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் உள்ளன. இவற்றை வைத்து கொண்டு அதிகாரத்தை பகிர தேவையில்லை. பிரபாகரன் பேச்சுக்கு வர வாய்ப்பு இருந்த போது அவர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவில்லை. ஏனெனில் அவருக்கு அதிகாரம் தேவையாகும். யாழ்ப்பாணம் மக்கள் துன்பப்படும் போது அவர் சொகுசாக வாழ்ந்தார். அவர் தனிநாடே கோரினார்.
தமிழ் மக்களுக்காக பேசுவதற்கு வாய்ப்பு இருந்தது. அதிகாரத்தை பகிர்வதினால் பாரிய பிரச்சினைகள் உள்ளன. சுமந்திரனுக்கு தெற்கில் வாழ்வதற்கு ஏதும் பிரச்சினை உள்ளதா? ஆனால் வடக்கில் தான் பாரிய பிரச்சினை உள்ளது. தெற்கில் இருந்து வடக்கிற்கு போய் வாழ முடியாது. தெற்கில் ஒன்றாக வாழ முடியும்.
சாதாரண மக்களுக்கு சந்தோஷமாக வாழ்வதே தேவையாகவுள்ளது. பாற் பண்னை, திராட்சையின் ஊடாக வைன் போன்ற உற்பத்தி அதிகமாக அதிகரிக்க வேண்டும். நாம் யாழ்ப்பாண மக்கள் மீது அதீத அன்பு வைத்துள்ளோம். சிறிமாவோ பண்டாரநாயக்க வடக்கு விவசாயிகளை நன்கு கவனித்தார். அதனால் அவர்கள் சிறிமாவோ பண்டாரநாயக்கவை பெரும் ஆதரவு வழங்கினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இருந்து எப்படி வடக்கு பிரச்சினை பற்றி பேச முடியும். அதிகார பகிர்வு தேவையில்லை. அதற்கு பதிலாக வடக்கில் இராணுவத்திற்கு தேவையான காணிகளை எடுத்து ஏனையவற்றை விடுவிக்க வேண்டும். கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்கு மாறாக அதிகாரத்தை பகிர்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்போது ஜனாதிபதி முறைமைக்கு எதிராகவே பேசினோம். ஜனாதிபதி முறைமையை மாற்றி ஆக வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். ஜனாதிபதி முறைமைக்கான அதிகாரத்தை குறைக்க வேண்டும். இந்திய ஜனாதிபதி போன்று அதிகாரம் இருக்க வேண்டும். சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டத்தில் எனது நிலைப்பாட்டை அறிவித்தேன். அதன்பின்னர் மத்திய குழுவுக்கு என்னை அழைக்கவில்லை. இது பிழையான எடுத்து காட்டாகும் என்றார்.