புதுதில்லி: தில்லியில் சமீபமாக அதிகரித்திருக்கும் காற்று மாசின் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.
தில்லியில் கடந்த சில தினங்களாகவே காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு இன்று 484 ஆக இருந்தது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தில்லி சாலைகளில் 200 மீட்டருக்கு அப்பால் வரும் வாகனங்கள் எதனையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்பானது தில்லியில் மட்டும் அல்லாது பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசத்தின் மதுராவுக்கு அருகே ஆக்ரா-நொய்டா இடையேயான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.