சோதனை வலையில் சசிகலா குடும்பம்!

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ், கிருஷ்ணபிரியா, விவேக், கலியபெருமாள், மகாதேவன் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி வீட்டிலும் சோதனை நடக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம்  தர்மயுத்தம் தொடங்கினார். தனி கோஷ்டியாக செயல்பட்ட அவருடன் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான அணி பேச்சுவார்த்தை நடத்தி இணைந்தனர். இப்போது, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணி கையில்தான் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகம் உள்ளது. ஆனால், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ்கார்டன், ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், கொடநாடு, சிறுதாவூர், பையனூர் பங்களாக்கள் என்று  பல சொத்துகள் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருக்கிறது.

நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மற்றும் ஜெயா டி.வி-யில் டி.டி.வி.தினகரன் ஆதரவு செய்திகள் வெளி வருகிறது. அதோடு, மழை வெள்ளம், டெங்கு, சட்டம் – ஒழுங்கு பிரச்னை என்று தமிழக அரசுக்கு எதிரான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்தும் எடப்பாடி பழனிசாமி அரசை கடுமையாக விமர்சித்தும் செய்திகள் வெளிவருவதாக புகார்கள் உள்ளன. ‘ஜெயா டி.வி-யையும் நமது எம்.ஜி.ஆர்  நாளிதழையும் கைப்பற்றுவோம்’ என்று எடப்பாடி பழனிசாமி  அணி சொல்லி வந்தாலும் அவர்களால் அந்த நிறுவனங்களுக்குள் கால் வைக்க முடியவில்லை.

தினகரன்

அதே நேரத்தில், ”எடப்பாடி  பழனிசாமி அரசு 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் கவிழ்ந்து விடும். தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று  டி.டி.வி.தினகரன் பேசி வருகிறார். இதெல்லாம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதிலும்  டி.டி.வி.தினகரன் வைக்கும் வாதங்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது என்கிறார்கள். அதனால்தான், ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு விசாரணக்கு வரும்போது, எடப்பாடி பழனிசாமி  அணியினர், ‘இரட்டை இலை சின்னத்தை முடக்க டி.டி.வி.தினகரன் சொல்கிறார்’ என்றக் குற்றச்சாட்டைச் சொல்லி வருகிறார்கள்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்றுதான் டி.டி.வி.தினகரன் சந்தித்தார். அப்போது, மருத்துவ சிகிச்சையில் இருக்கும் நடராஜன் உடல்நிலை குறித்தும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் டி.டி.வி.தினகரன் பேசி விட்டு வந்தார். இந்நிலையில்தான், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் இங்கு சோதனை நடத்திய அதே நேரத்தில், ஜெயா டி.வி நிர்வாகிகள் தொடர்புடைய 10 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதை ஜெயா டி.வி நிறுவனம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 187 இடங்களில் தற்போது வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது.

இதே நேரத்தில், இளவரசி மகன் விவேக் வீடு மற்றும் அவர் நிர்வாகம் செய்து வரும் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ‘ஜாஸ் சினிமாஸ்’ அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டிலும் சோதனை நடக்கிறது. இதுதவிர, மன்னார்குடியில் உள்ள நடராஜன் வீடு, பாண்டிச்சேரி டி.டி.வி.தினகரன் பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடக்கிறது. சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீட்டிலும் சோதனை நடக்கிறது. இளவரசியின் சம்பந்தி கலியபெருமாளின் திருச்சி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை – புதுக்கோட்டை சாலையில் உள்ள சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷ் வீட்டிலும் சோதனை நடக்கிறது. ஒரே நேரத்தில், சசிகலா குடும்பம் வருமான வரித்துறையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.  திவாகரன் வீடு மற்றும் அவரது கல்வி நிறுவனங்களும் இந்த ரெய்டில் தப்பவில்லை. டி.டி.வி தினகரனின்  தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி வீட்டிலும் சோதனை நடக்கிறது.

 

கிருஷ்ணப்பிரியா

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் ஆதரவு வக்கீல் காசிநாத பாரதி கூறுகையில், ”இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. வருமான வரித்துறை சோதனை நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஒரு குடும்பத்தைக் குறிவைத்து இந்த சோதனை நடத்துவது ஏன் என்பதுதான்  எங்களுடைய கேள்வி. வருமான வரித்துறை மூலம் அச்சுறுறுத்த நினைக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் திருவாரூர் முருகானந்தம் கூறுகையில், ”பி.ஜே.பி அரசின் பழிவாங்கும் செயல் இது பொதுமக்கள் நினைக்கிறார்கள். அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த சோதனைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். வருமான வரித்துறை சோதனையால், எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. தொண்டர்களின் செல்வாக்கு கூடத்தான் செய்துகொண்டிருக்கிறது. தொண்டர்களின் பலத்தோடு பொதுச்செயலாளர் சசிகலா குடும்பத்தினர் இந்த சோதனையை துணிச்சலாக எதிர்கொள்வார்கள்” என்று கூறினார்.

நாஞ்சில் சம்பத் கூறுகையில், ”ஜெயா டி.வியையும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழையும் கைப்பற்றவே இந்தச் சோதனை நடக்கிறது. இதையெல்லாம் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம்” என்றார்.

தினகரன் சசிகலா

முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் கூறுகையில், ”அப்போலோ மருத்துவமனையில், அம்மா மருத்துவச் சிகிச்சையில் இருந்தது குறித்து வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அதையெல்லாம் எடுத்து அழித்துவிட்டு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பழி போடவே இந்தச் சோதனைகள் நடக்கின்றன. ஏற்கெனவே வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய விஜயபாஸ்கர், ராம மோகனராவ், நத்தம் விஸ்வநாதன், சேகர் ரெட்டி போன்றவர்களின் வழக்குகள் என்னவானது? முதல் அமைச்சர் பெயர் உள்பட பலரது பெயர்கள் வருமான வரித்துறையின் புகார்ப் பட்டியலில் உள்ளது. அவர்கள் மீதெல்லாம் இந்த வருமான வரித்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? குறிப்பாக சசிகலா குடும்பத்தை குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் பி.ஜே.பி அரசுதான் காரணம். சென்னை வந்த மோடி, கருணாநிதியை சமாதானம் செய்துவிட்டு சசிகலா குடும்பத்தைப் பழி வாங்குகிறார்.” என்றார்.

இதுகுறித்து பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ”தன்னாட்சி அமைப்பு வருமான வரித்துறை. அவர்கள் மீது அரசியல் சாயம் பூசக்கூடாது.” என்றார்.