குர்கோனில், ஏழு வயதுச் சிறுவனின் நாக்கைத் துண்டித்துக் கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம் ஏறப்பட்டுள்ளது.
ரயான் சர்வதேச பாடசாலை மாணவனான ப்ரத்யுமான் (7), கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி பாடசாலைக் கழிவறையில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டான்.
கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் விசாரணை நடத்தியதில், பாடசாலைப் பேருந்து நடத்துனரான குமார் என்பவரே கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பொலிஸ் விசாரணையில், பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின் சிறுவனைக் கொன்றதாக குமார் ஒப்புக்கொண்டார்.
இருந்தபோதும், குமாரின் உறவினர்கள் இது திட்டமிட்ட சதி என்று தொடர்ந்து கூறி வந்தனர்.
இந்நிலையில், கண்காணிப்பு கெமரா பதிவுகளை மீளாய்வு செய்த பொலிஸ் அதிகாரிகள், அதே பாடசாலையின் பதினொராம் வகுப்பு மாணவர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதன்போது, ப்ரத்யுமானைக் கொலை செய்தது தானே என்றும், பாடசாலையில் நடைபெறவிருந்த பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பையும், பரீட்சை ஒன்றையும் ஒத்திப்போடுவதற்காகவே தான் ப்ரத்யுமானைக் கொலை செய்ததாகவும் அந்த மாணவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, இந்த வழக்கை குற்ற விசாரணைப் பிரிவு (சிபிஐ)க்கு மாற்றுமாறும், மாணவரின் வயதைக் கருத்திற்கொள்ளாமல் அவருக்கு மரண தண்டனை அளிக்குமாறும் ப்ரத்யுமான் சார்பில் அவரது உறவினர்கள் போராடி வருகின்றனர்.