சசிகலா குடும்பத்து வேர் வரை பாய்ந்த டெல்லி!

சசிகலா குடும்பத்தினரோடு சேர்த்து அவர்கள் ஆதரவு நிர்வாகிகளையும் களையெடுக்கத் தொடங்கியிருக்கிறது வருமான வரித்துறை. ‘அரசியலை விட்டு ஒதுங்குங்கள் என பலமுறை அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் காட்டிய கெடுபிடிதான் ரெய்டுக்கு மூல காரணம்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்திலேயே, கார்டனின் போக்குவரத்துகளை வெகுசீரியஸாகக் கண்காணிக்கத் தொடங்கியிருந்தது வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு வந்த நாள்களில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, ராமமோகன ராவ் என கார்டனுக்கு நெருக்கமானவர்கள் வளைக்கப்பட்டனர். ரெய்டு நடந்துகொண்டிருந்த காலங்களில் ஐதராபாத்தில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் சென்னை வந்து தங்கினர். ‘ தங்கம், வைரம், பணம், வர்த்தகம் என ஒவ்வொரு துறையிலும் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற இந்த அதிகாரிகள், எப்போது வேண்டுமானாலும் ரெய்டுக்குப் பயன்படுத்தப்படுவார்கள்’ என்ற தகவல் பரவியது. இது சசிகலா குடும்பத்துக்குக் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

xdinakaran34545-21-1503303553-jpg-pagespeed-ic-nft3vgh2m--26-1509033039சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அந்த அதிகாரிகள், கடைசி வரையில் ரெய்டு நடவடிக்கைளுக்குப் பயன்படுத்தப்படவில்லை. சசிகலாவின் சகோதரர் திவாகரன், தனக்கு நெருக்கமான டெல்லி சோர்ஸ்கள் மூலம் சமாதானக் கொடியை பறக்கவிட்டார். ஆனாலும், அடுத்தடுத்து வந்த நாள்களில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை, தினகரன் மீதான வழக்குகள் என அ.தி.மு.க-வின் அஸ்திவாரத்தை அசைக்கும் வேலைகள் வேகம் எடுத்தன. இதன்பின்னர், சில மாதங்கள் அமைதியாக இருந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று காலை 6 மணியில் இருந்து அதிரடி சோதனையை நடத்திவருகின்றனர். தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, கலியபெருமாள் ஆகியோரது வீடுகளிலும் கொடநாடு எஸ்டேட், மிடாஸ் சாராய ஆலை, நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி என சசிகலா குடும்பத்தினரின் வர்த்தக நிறுவனங்களையும் குடைந்து கொண்டிருக்கின்றனர். சுமார் 180 இடங்களில் ரெய்டு நடந்துவருகிறது.

சசிகலாசசிகலா குடும்பத்து உறவினர் ஒருவரிடம் பேசினோம். “இரட்டை இலை விவகாரத்தில் சட்டரீதியாகவே போராடிக் கொண்டிருக்கிறார் தினகரன். ‘நாங்கள் எவ்வளவு சொல்லியும், இப்படிப் பிடிவாதம் காட்டுவது நல்லதல்ல. உங்கள் குடும்பத்துக்கு 60 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. அரசியலில் இருந்து ஒதுங்கிப் போய் வியாபாரத்தைப் பாருங்கள். உங்களை எதுவும் செய்ய மாட்டோம். அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்’ என தினகரன் தரப்புக்குப் பலமுறை டெல்லி அறிவுறுத்தியது. இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமே நினைத்தாலும் இலை விவகாரத்தில் முடிவு சொல்ல முடியாத சூழலை உருவாக்கினார். இந்த விவகாரம் டெல்லி தரப்புக்குக் கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியது. சில நாள்களுக்கு முன்புகூட, ‘எடப்பாடி பழனிசாமிக்குத்தான் சின்னம் கிடைக்கும். ஒதுங்குங்கள்’ எனக் கூறியும் அவர் அமைதியாக இருக்க விரும்பவில்லை. அதேபோல், ஜெயா டி.வி மற்றும் ஜாஸ் சினிமாஸை நடத்திவரும் இளவரசி மகன் விவேக் ஜெயராமன் மீது தொடக்கத்தில் இருந்தே கடும் கொந்தளிப்பில் இருந்தனர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்.

‘தினகரன் தரப்பை வலுவாக்குவதும் கூட்டங்களைத் திரட்டுவதும் விவேக்தான். அவரை ஓரம்கட்டிவிட்டால் குடும்பத்து ஆட்கள் ஒதுங்கிவிடுவார்கள்’ என டெல்லிக்குத் தகவல் பறந்தது. அதற்கேற்ப, எப்போது வேண்டுமானாலும் ஜாஸ் சினிமாஸில் ரெய்டு நடக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதற்குப் பதில் கொடுத்த விவேக் தரப்பினர், ‘ரெய்டைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. அனைத்துக்கும் முறையான கணக்கு வழக்குகள் இருக்கின்றன. ரெய்டு நடத்த விரும்பினால், அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ எனத் தைரியமாகவே பதில் அளித்தனர். இன்று காலை விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீட்டையும் அதிகாரிகள் குடைந்து வருகின்றனர். சசிகலா சிறைக்குச் சென்ற பிறகுதான், கிருஷ்ணபிரியா அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். நீட் எதிர்ப்புப் போராட்டத்தை அவர் நடத்தியதை தமிழகத்தில் உள்ள சசிகலா குடும்பத்து எதிர்ப்பாளர்கள் ரசிக்கவில்லை. இன்று நடக்கும் ரெய்டில் கிருஷ்ணபிரியாவும் அவர் நடத்திவரும் பவுண்டேஷனும் தப்பவில்லை. இந்த ரெய்டில் சசிகலா குடும்பம் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கட்சி நிர்வாகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என விவரித்தவர்,

விவேக் ஜெயராமன்“இந்த ரெய்டை நடத்துவதற்குப் பல மாதங்களாகத் திட்டமிட்டுள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். சசிகலா குடும்பத்தின் பணப் போக்குவரத்துகளை தீவிர ஆய்வுசெய்த பிறகுதான் ரெய்டைத் தொடங்கியுள்ளனர். டாக்டர் வெங்கடேஷின் நண்பரான முன்னாள் கவுன்சிலர் ராஜேஸ்வரன் என்பவர் வீட்டில் இன்று ரெய்டு நடக்கிறது. இளைஞர் பாசறை பொறுப்புக்கு இவர் சமீபத்தில்தான் பதவிக்கு வந்தார். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அண்மையில் செயலாளராக நியமிக்கப்பட்ட பரணி கார்த்திக் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. இவர் குடவாசல் ராஜேந்திரனின் மருமகன். பரணி கார்த்திக் மணல் வியாபாரம் செய்துவருகிறார். திவாகரனுக்கு வலதுகரமாக இருப்பவர். திருச்சி கூட்டங்களுக்கு அவர்தான் உதவி செய்தார் என்பதை சிலர் மட்டுமே அறிவார்கள். அதாவது பணப் போக்குவரத்து எந்தெந்த நெட்வொர்க் மூலமாக நடக்கிறது என்பதை வருமான வரித்துறையினர் துல்லியமாகக் கண்காணித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டம் மற்றும் முட்டை கொள்முதலுக்கான டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. 300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் பணிகளில் முன்னாள் அரசு ஆலோசகர் ஒருவர்தான் ஈடுபட்டு வருகிறார். இவர் சசிகலா குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர். இந்த ஒப்பந்தத்திலும் சசிகலா குடும்பத்தின் மறைமுக தலையீடு இருந்துள்ளது. இதைப் பற்றிய தகவல்களையும் அதிகாரிகள் திரட்டியுள்ளனர்” என்றவர், “அணிகள் இணைப்பின்போது, ‘ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆரைக் கைப்பற்றுவோம்’ என்றார் எடப்பாடி பழனிசாமி. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அமைச்சர்களின் ஊழல் விவகாரங்களை ஜெயா டி.வி வெளிக்காட்டத் தொடங்கியதையும் அவர்களால் ஏற்றுக் கொள்ளவில்லை. சசிகலா தரப்புக்குக் கூட்டம் கூடுவதுதான் பெரும் எரிச்சலைக் கொடுக்கிறது. இந்தக் கூட்டம் எல்லாம் உண்மையிலேயே ஆதரவா… இல்லையா என்பதை மத்திய உளவுப் பிரிவால் கணிக்க முடியவில்லை. எனவே, சசிகலா குடும்பத்தினரோடு துணை நிற்கும் கூட்டங்களை சிதறடிப்பதுதான் இந்த ரெய்டின் நோக்கம். இதில் எதுவுமே கிடைக்கப் போவதில்லை” என்றார் இயல்பாக.

“கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியைக் கொன்று கொள்ளை முயற்சி நடந்தபோது, சசிகலா குடும்பத்தினர் மத்தியில் எவ்விதப் பதற்றமும் இல்லை. இதைப் பற்றிப் பேசிய கார்டன் நிர்வாகி ஒருவர், ‘கொடநாட்டில் எதுவுமே இல்லை. கொள்ளையடிக்கப்பட்டிருந்தால் துணிமணிகளைத்தான் களவாடியிருக்க முடியும். அதனால் எங்களுக்கு எந்தவித பதற்றமும் இல்லை’ எனப் பதில் அளித்தார். அந்தளவுக்கு மிகத் தெளிவாக பண விவகாரங்கள் பதுக்கப்பட்டுவிட்டன. அதுவும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலங்களிலேயே இந்த வேலைகளை மன்னார்குடி உறவுகள் செய்து முடித்துவிட்டனர்” என்கிறார் கார்டன் உதவியாளர் ஒருவர்.