சென்னை:
தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து 8 நாட்கள் பெய்து வந்தது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் மழைநீர் சாலைகளில் ஆறாக ஓடியது. புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள நீர் படிப்படியாக அகற்றப்பட்டு வருகிறது.
இரண்டு நாட்களாக சென்னை சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை இல்லாவிட்டாலும் தென் மாவட்டங்களில் மழை வலுத்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், நாளை முதல் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கடலோர மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மின்சாரம், மீட்புப்பணிகள் துறையினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.