ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும், பிரச்சினைகள் உருவாகுவதற்கு அடிப்படைக் காரணம் ஓர் அரசியல் தீர்வு ஏற்படாமையே ஆகும். எனவேதான் அரசியல் தீர்வு விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தவேண்டியது எமது கடமை என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவரிடம் தமிழில் ஒரு கேள்வியை எழுப்பியிருநதார்.
“அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதைக் காரணங்காட்டி தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைக் கோராது மௌனமாக இருக்க முடியாது என்பதை மூத்த அரசியல்வாதி சம்பந்தன் ஐயா அவர்கள் ஏன் உணரவில்லை?” என்று நாமல் தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு இரா.சம்பந்தன் தமிழில் தக்க பதில் வழங்கியுள்ளார்.
அதில், “ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். கடந்த 70 வருடங்களாக அவ்வாறான ஒரு தீர்வைப் பெறுவதற்கு தமிழ் மக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் கடுமையாக உழைத்து வந்திருக்கின்றார்கள்.
ஏனைய பிரச்சினைகள் உருவாகுவதற்கு அடிப்படைக் காரணம், ஓர் அரசியல் தீர்வு ஏற்படாமையேயாகும். எனவேதான் அரசியல் தீர்வு விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தவேண்டியது எமது பிரதானமான கடமை என்று நாங்கள் கருதுகின்றோம். அதன் மூலமாகத்தான் எமது மக்கள் பூரணமான சமாதானத்தையும் சமத்துவத்தையும் பெறமுடியும்.
ஏனைய விடயங்கள் தொடர்பில் நாங்கள் கவனம் எடுக்காமல் இருக்கின்றோம் என்று கூறுவது ஒரு பொறுப்பற்ற பேச்சாகும். உள்நாட்டில் அரசுடனும், நாடாளுமன்றத்திலும், வெளிநாடுகளில் சர்வதேசத்துடனும் ஒவ்வொரு விடயங்கள் சம்பந்தமாகவும், அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு, காணாமல்
ஆக்கப்பட்டோர் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கடும் முயற்சியெடுத்து வந்திருக்கின்றோம்.
இந்தக் கருமங்கள் முறையான பாதையில் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவை முழுமை பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவெனில், துவேசவாதிகள், பெரும்பான்மை மக்கள் மத்தியிலும், இராணுவத்தினர் மத்தியிலும் இனத்துவேசத்தைக் கிளறுகின்றதன் விளைவாக ஏற்படுகின்ற தடைகளேயாகும்.
எம்மை விமர்சிப்பவர்கள் நியாயபூர்வமாக அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், ஏனைய விடயங்கள் சம்பந்தமாகவும் தங்களுடைய நிதானமான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நல்குவார்களாகவும் இருந்தால் சகல பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.
பொறுப்பற்ற பேச்சில் ஈடுபடாமல் அவ்விதமான ஆதரவை நல்கும்படியாக நாம் கேட்டுக்கொள்கிறோம்” என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.