இன்று வழங்கிய முக்கியமான தீர்ப்பு ஒன்றில், மேன்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) ஐரோப்பிய ஒன்றிய உறவினர்கள் (Extended Family Members) விண்ணப்பங்கள் மறுக்கப்படும் பொழுது மேன்முறையீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
3 மூத்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவே MK(Pakistan) [2017] EWCA Civ 1755எனும் வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்னர் மேலாய தீர்ப்பு மன்றம் (Upper Tribunal) ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுடைய உறவினர்களுடைய விண்ணப்பங்களுக்கு மேல்முறையீடு செய்யும் உரிமை கிடையாது என Sala (EFMs: Right of Appeal) [2016] UKUT 00411 (IAC) எனும் வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து பல விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு மேல்முறையீட்டு உரிமை வழங்காமல் மறுத்திருந்ததுடன், நிலுவையிலிருந்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு மேலதிக விபரங்கள் கோரி நீதிமன்றத்தால் கடிதங்கள் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பை முற்றுமுழுதாக மாற்றும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பு அமைந்துள்ளது.
இதனால், பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு மறுக்கப்பட்ட மற்றும் பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்குவதற்கு மறுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுடைய உறவினர்களுடைய விண்ணப்பங்களில் பலமாற்றங்கள் ஏற்படலாம் என்று நம்பப்படுகின்றது.