ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மின்சார ரயில் என்ஜின் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் ஓடத் துவங்க, நிலைய ஊழியர்கள் அதனை சினிமா பாணியில் 13 கிலோ மீட்டர் பைக்கில் துரத்திப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையிலிருந்து மும்பை செல்லும் மின்சார எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று மதியம் மூன்று மணி அளவில் கர்நாடகாவின் கலபுராகி மாவட்டத்தில் உள்ள வாடி ரயில் நிலைய சந்திப்புக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து மகாராஷ்டிராவின் சோலாப்பூர் செல்லும் பாதையானது மின்மயமாக்கப்படாததால், அந்த ரயிலுடன் டீசல் என்ஜின் இணைக்கப்படுவது வழக்கம். அதற்காக ரயில் அங்கு நின்று கொண்டிருந்தது சிறிதுநேரத்தில் எப்பொழுதும் போல டீசல் என்ஜின் இணைக்கப்பட்டவுடன் அந்த ரயிலானது வாடி சந்திப்பிலிருந்து, சோலாப்பூர் நோக்கி புறப்பட்டது.
அதே நேரம் கழற்றி விடப்பட்ட மின்சார ரயில் என்ஜினில் இருந்து ஓட்டுநர் கீழே இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் அந்த என்ஜின் பெட்டியானது தனியாக நகரத் துவங்கியது. இதைக் கண்ட ஓட்டுநர் மற்றும் வாடி நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக அதன் பாதையில் இருந்த நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு, சிக்னல்கள் கிளியர் செய்யப்பட்டன.அத்துடன் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ரயில்களும் நிறுத்தப்பட்டன.
அத்துடன் ஊழியர்கள் உடனடியாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் அந்த பெட்டியினைத் துரத்திச் சென்றனர். முடிவில் நல்வர் என்ற இடத்தில், பெட்டியின் வேகம் கொஞ்சம் கட்டுப்பட்ட பொழுது அதில் தாவி ஏறி, அதன் இயக்கத்தை நிறுத்தினர்.
எனினும் அதற்குள் அந்த மின்சார ரயில் என்ஜின் 13 கிலோ மீட்டர் தொலைவினை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது .