சென்னையில் குப்பைமேட்டில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று வயது குழந்தையை பக்கத்து வீட்டு பெண்ணே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பாரதிநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மகள் காவ்யா.
சம்பவதினத்தன்று வெங்கடேசனின் மனைவி ஜெயந்து காவ்யாவை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது காவ்யாவை காணவில்லை, அனைத்து இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
இதனையடுத்து வில்லிவாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, குழந்தை அருகிலுள்ள குப்பைமேட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் காவ்யா தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து பக்கத்து வீட்டு பெண்ணான தேவி மீது சந்தேகம் இருப்பதாக காவ்யாவின் பெற்றோர் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தேவி காவ்யாவை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கனவே இரு குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், பழிவாங்குவதற்காக காவ்யாவை கொன்றுள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஜெயந்தியின் குழந்தை நன்றாக பேசும், என் குழந்தை வாய் பேசாது என்பதால் விரக்தியில் இருந்தேன். அடிக்கடி எனக்கும் ஜெயந்திக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது, எனவே ஆத்திரத்தில் இருந்த நான் ஜெயந்தி வீட்டில் இல்லாத சமயம் பார்த்து குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டேன். சடலத்தை துணியில் சுருட்டி மறைவிடத்தில் வைத்திருந்து அதிகாலையில் முட்புதரில் போட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தேவியை பொலிசார் கைது செய்தனர்.