வில்லிவாக்கம் பாரதியார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் காவ்யா (வயது 4). கடந்த 7-ந்தேதி மாலை மாயமான காவ்யா மறுநாள் அருகில் உள்ள குப்பை கொட்டப்படும் இடத்தில் பிணமாக கிடந்தாள்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி காவ்யா கழுத்து நெரிக்கப்பட்டு, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேசின் மனைவி தேவி, சிறுமி காவ்யாவை கொலை செய்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான தேவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் வெங்கடேசன் குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். எனது 3 வயது மகனுக்கு சரியாக பேச்சு வரவில்லை. ஆனால் வெங்கடேசனின் மகள் காவ்யா துருதுருவென நன்றாக பேசுவாள். இது பற்றி அக்கம் பக்கத்தினர் என்னிடம் கேட்டு வந்தனர்.
இதனால் காவ்யா மீது எனக்கு பொறாமையாக இருந்தது. சம்பவத்தன்று காவ்யாவை வீட்டின் உள்ளே பூட்டி வைத்துவிட்டு அவளது தாய் ஜெயந்தி சென்றுவிட்டார்.
இதனை கவனித்த நான் கதவை திறந்து காவ்யாவை எனது வீட்டுக்கு அழைத்து வந்தேன். என்னிடம் அவள் நன்றாக பழகுவாள் என்பதால் சத்தம் போடவில்லை.
வீட்டுக்கு வந்ததும் பொறாமையில் இருந்த நான் காவ்யாவை கொலை செய்து என்னிடம் தகராறில் ஈடுபடும் வெங்கடேசன் குடும்பத்தை பழிவாங்க முடிவு செய்தேன்.
இதையடுத்து சிறுமி காவ்யாவை வீட்டில் இருந்த வாளி தண்ணீரில் மூழ்கடித்தேன். மேலும் அவளது கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் கவ்யாவின் உடலை போர்வையால் சுற்றி வீட்டில் வைத்து இருந்தேன்.
எனது கணவர் ஓட்டலில் வேலைபார்ப்பதால் இரவு வீட்டிற்கு வருவதில்லை. இது எனக்கு சாதகமாக அமைந்தது. அதிகாலையில் காவ்யாவின் உடலை அருகில் குப்பை கொட்டும் இடத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வந்து விட்டேன்.
ஆனால் வெங்கடேசன் குடும்பத்தினர் என்மீது சந்தேகம் அடைந்து போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.