டெங்குவை கட்டுபடுத்த அரசுக்கே இலவசமாக கொடுத்த இளைஞன்..!

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் மருத்துவமனைகளில் டெங்கு பாதிக்கபட்டோர்களுக்கு சரியான பராமரிப்பு இல்லை என்று குற்றசாட்டு எழுந்தது..

டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டோர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்களாவார்கள். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்து வருகிறது என புள்ளிவிவரம் கூறுகிறது..

இதையடுத்து இம்மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் அலங்கார மீன உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார்.

இவர் டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்கும் கம்பூசியா மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்து தற்போது மாநகராட்சி நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்.

தமிழகத்தில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய டெங்கு நோயை கட்டுப்படுத்த டெங்கு கொசுப்புழுக்களை உண்ணும் கம்பூசியா மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்து மாநகராட்சிக்கு இலவசமாக வழங்கியுள்ளோம்.

இந்த மீனுக்கு கொசுப்புழுக்களை உண்ணும் திறன் அதிகமாகும், அதனால் இது டெங்கு காய்ச்சலை குறைக்க பெருமளவு உதவி செய்யும்..

கொசுப்புழுக்களை உண்ணும் இந்த கம்பூசியா மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் நன்னீர் குட்டை, குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்தேக்கங்கள் ஆகியவற்றில் விடுவார்கள்.

இதன்மூலம் டெங்கு கொசு உற்பத்தியைக் குறைக்க முடியும். இதுவரை 70 ஆயிரம் மீன்கள் மாநகராட்சிக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.