நவம்பர் 9-ம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், நிறுவனங்கள் பரபரப்பாக இருந்தன. அன்று 187 பிரமுகர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டின் போது அதிகாரிகள் பயணித்த காரில் ‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’ என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தன. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கால் டாக்ஸி நிறுவனமான ‘ஃபாஸ்ட் ட்ராக்’ பெயர்கள் காரில் இருந்தன. இதைப் பார்த்த தினகரன் தரப்பினர், ‘‘கால் டாக்ஸி நிறுவனத்தின் உரிமையாளர், ‘ரெட்சன்’ அம்பிகாபதி. சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது அலுவலகம் செயல்படுகிறது. இவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர். இதிலிருந்தே புரியவில்லையா?… ஓ.பன்னீர்செல்வம் சொல்லித்தான் அம்பிகாபதி அவரது நிறுவனத்தில் இருந்து கால் டாக்ஸிகளை அனுப்பியிருக்கிறார். எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் இந்த ரெய்டை நடத்தச் சொல்லி பிரதமர் மோடியைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். ஆனால், பி.ஜே.பி-யின் கனவு பலிக்காது” என்கிறார்கள்.
இதுபற்றி ரெட்சன் அம்பிகாபதியிடம் கருத்து கேட்டோம்.
‘‘ரெய்டு நடந்த அன்று காலை நான் தேனியில் இருந்தேன். டி.வி. செய்தியில், எங்கள் நிறுவன கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றதைப் பார்த்தேன். உடனே, சென்னை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு விசாரித்தேன். ஐந்து நாள்களுக்கு முன்பு, 160 கார்களைத் திருமண நிகழ்ச்சி ஒன்றிக்காக முன்பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி, ரெய்டுக்கு முன்தினம் இரவு 9.30 மணிக்கு எங்கள் கார்கள் சென்றிருக்கின்றன. அதன்பிறகுதான் ரெய்டுக்கு கார்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது என்று என்னிடம் சொன்னார்கள். இதற்கு முன்பு ஒருமுறை தேர்தல் ஆணையத்தின் பயன்பாட்டுக்காக 300 கார்களை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்.
பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது, முன்னாள் பி.ஜே.பி. மாவட்டத் தலைவர் எங்கள் நிறுவனத்திடம் 100 கார்களைக் கேட்டார். அனுப்பினோம். இது எங்களுடைய பிசினஸ். நீங்கள்கூட போனில் நூறுக்கும் மேற்பட்ட கார்களைக் கேட்டு ஆர்டர் கொடுத்தால், நிச்சயம் அனுப்புவோம். இதற்கும் என்னுடைய அரசியலுக்கும் சம்பந்தமேயில்லை. நான், பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்தான். வருமானவரித் துறை, மத்திய அரசின் ஓர் அங்கம். அபபடியிருக்கும்போது ஓ.பி.எஸ். சொன்னதால்தான் நான் கார்களை அனுப்பியதாக அரசியல் வெறுப்பில் பேசுகிறார்கள். எங்கள் நிறுவன கார்கள் சொன்ன நேரத்தில் சரியாக ஒத்துழைப்பு தந்ததாக வருமான வரித்துறையிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது. கார்களுக்கான வாடகை ரூபாயை முறைப்படி அந்தத் துறையினர் செலுத்திவிட்டனர். இதுதான் நடந்தது’’ என்கிறார்.