சசிகலா குடும்பத்தின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளைக் கணக்கிடுவதைவிடவும், அவர்களது ஆள் அரவமற்ற காட்டு பங்களாக்களை நினைத்துத்தான் கலவரப்படுகின்றனர் ஐ.டி. அதிகாரிகள்.
தினகரனின் புதுச்சேரி காட்டு பங்களா மற்றும் திவாகரனுக்கு சொந்தமான பண்ணைகளைப் பார்த்து மிரண்டு போயுள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
அதுவும் காட்டு பங்களாக்களுக்குச் செல்வதற்குள் அதிகாரிகள் ஒருவழியாகிவிட்டனர் என்கின்றன ஐ.டி வட்டாரங்கள். போயஸ் கார்டனில் சசிகலா கோலோச்சத் தொடங்கிய காலத்தில் இருந்தே, நெருங்கிய சொந்தங்கள் ஒவ்வொருவரையும் செட்டில் செய்யும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்.
நடராஜன், திவாகரன் உள்ளிட்டவர்கள் ஓரம்கட்டப்பட்ட போதும், ஜெயலலிதாவின் குட்புக்கில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தார் தினகரன்.
விலக்கப்பட்ட தினகரன்
‘அம்மா குறிப்பறிந்து செயல்படுவதில் தினகரனை யாராலும் மிஞ்ச முடியாது’ என உறவுகளே பாராட்டத் தொடங்கினர். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் வந்தார்.
ஃபெரா வழக்குகள் நெருக்கத் தொடங்கின. வழக்கறிஞர் ஜோதியுடன் ஏற்பட்ட மோதலில், கார்டன் வட்டாரத்தில் இருந்து தினகரன் விலக்கி வைக்கப்பட்டார்.
பங்களாவில் பதுக்கல்
ஆனாலும், சசிகலாவுடன் மறைமுகமாக அவர் பேசிக் கொண்டுதான் இருந்தார். கார்டனை விட்டு விலகிய காலங்களில் அவர் வாங்கிய சொத்துக்களில் புதுச்சேரி, ஆரோவில் பகுதியில் உள்ள பொம்மையார் பாளையம் காட்டு பங்களாவும் ஒன்று.
கார்டன் வழியாக வந்த பணம், நகை, சொத்துக்களை இந்தப் பங்களாவுக்குள் தினகரன் வைத்திருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என தகவல் வந்ததால், இந்தக் காட்டு பங்களாவைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர்.
பீதியடைந்த அதிகாரிகள்
தினகரனுக்கு இப்படியொரு காட்டு பங்களா இருப்பதே, மன்னார்குடியின் பெரும்பாலான உறவுகளுக்குத் தெரியவில்லை. காவலாளி மட்டும்தான் அங்கிருக்கிறார். நான் அங்கு செல்வதில்லை எனவும் பேட்டியளித்தார் தினகரன்.
இந்தக் காட்டு பங்களா செல்லும் வழியே மிக அபாயகரமானதாக இருக்கிறது. தனியாக யாரும் சென்று வர முடியாத அளவுக்கு அச்சுறுத்துகிறது அந்தக் காடு. யாரையாவது கொன்று புதைத்தால்கூட கண்டறிய முடியாது என அதிகாரி ஒருவர் பீதிகிளப்பியிருக்கிறார்.
காவலாளியிடம் துருவி துருவி விசாரணை
அவசரத்துக்குக்கூட வாகனத்தை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு கொடுமையான பாதையாக இருக்கிறது என கலவரப்படுகின்றனர் அதிகாரிகள் சிலர்.
புதுவை அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசுகையில், தினகரனின் மறைமுக நடவடிக்கைகளுக்கு இந்தப் பங்களாவைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற தகவலும் வந்துள்ளது.
யாரும் வாழ முடியாத அளவுக்கு, அடர்த்தியான காட்டுப் பகுதியில் ஏன் பங்களா வாங்க வேண்டும்? தினகரன் வரும்போது அவருடன் யார் யார் வருவார்கள்? என்ன பேசுவார்கள்? சசிகலா வந்திருக்காரா என்றெல்லாம் காவலாளியிடம் விசாரித்துள்ளனர்.
எலும்புக் கூடு
சிறுதாவூர் பங்களாவும் இதேபோல்தான் உள்ளது. அருகில் இருந்த நிலத்தின் உரிமையாளர்களை எல்லாம் மிரட்டி அனுப்பிவிட்டதால், சுற்றிலும் செடிகள், புதர்கள் என அச்சமூட்டும் பகுதியாகவே மாறிவிட்டது.
சில மாதங்களுக்கு முன்புதான் சிறுதாவூர் பங்களா அருகில் காவலாளி ஒருவரின் சடலமும் எலும்புக் கூடுகளும் கிடந்துள்ளன. அந்தப் பண்ணை வீட்டுக்கு ஆடி காரில் அடிக்கடி வந்து சென்ற சொந்தங்கள் யார் என்பதையும் விசாரிக்கின்றனர்.
சசிகலா வெளியில் இருந்தவரையில், பங்களா பராமரிப்பு தடங்கல் இல்லாமல் நடந்து வந்தது. இப்போது கேள்வி கேட்க யாரும் இல்லாததால், அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
பொம்மையார் பாளையம் காட்டு பங்களாவில் இருந்து தினகரனுக்கு எதிராக சில பூதங்கள் கிளம்ப இருக்கின்றன” என்கிறார்.