சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீர் திருப்பமாக தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பரபரப்பு அடங்கும் முன், அடுத்த பரபரப்புக்குத் திரி கிள்ளிவிட்டது வருமான வரித்துறை! நவம்பர் 9 ஆம் தேதி காலை 6 மணிக்கு 187 இடங்களில் தொடங்கிய சோதனையில், 40 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் 48 மணி நேரங்களைத் தாண்டியும் சோதனை தொடர்ந்து வருகிறது. இரண்டு நாட்களைத்தாண்டி நடக்கும் இந்தச் சோதனை தமிழக அரசியல் களத்தில், மட்டுமல்ல… தேசிய அளவிலும் மிகுந்த பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. ”187 இடங்கள், 1,800 அதிகாரிகள் என்று இந்தியாவிலேயே இது மிகப்பெரிய தேடுதல் வேட்டை” என்கிறார்கள் சீனியர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
ஒரே நேரத்தில், இத்தனை அதிகாரிகள் வேறு இடங்களில் ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்தாலும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களைச் சுற்றி நடைபெற்றுவரும் மெகா சோதனை இது என்பதால், நாடு முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பான விறுவிறு அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன. சசிகலா குடும்பம், அவரது உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்கள், அவர்களது நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் என்று அனைவருமே கடந்த 48 மணி நேரத்துக்கு மேல் சங்கிலித் தொடர் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ‘வீட்டுக் காவல்’ போலவே வைக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 9 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11-ம் தேதி அதிகாலை 6 மணி வரையிலான 48 மணி நேர வருமான வரிச்சோதனையின் முக்கிய ஹைலைட் விஷயங்கள் இங்கே…
* சென்னை, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, நாமக்கல், கோவை, கோடநாடு, புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் என நாடு முழுக்க மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறையின் அதிரடி சோதனை 9 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்குத் தொடங்கியது. டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனை இருப்பதாக சொல்லி அதற்கான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வருமானவரித்துறை செய்திருந்தது. ஆனால், என்ன நினைத்தார்களோ திடீரென்று 9 ஆம் தேதி அந்த முடிவை மாற்றிவிட்டார்கள். டி.டி.வி.தினகரன் வீட்டுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், போன வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டார்.
* முதல்நாளில் சுமார் 15 மணி நேரங்களில், 40 இடங்களில் தங்களது சோதனையை முடித்துக் கொண்டனர் வருமான வரித்துறையினர். 2-வது நாளாக நேற்று 147 இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. டி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் சென்னை நீலாங்கரை பங்களாவில், கணக்கில் காட்டப்படாத 7 கிலோ தங்க நகைகளும் சில ஆவணங்களும் சிக்கியதாக 2-வது நாள் சோதனை முடிவில், வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சசிகலாவின் உறவினர்கள், தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கு 60 போலி நிறுவனங்களைத் தொடங்கியிருப்பது இந்த 2 நாள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் கணக்குகள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய வங்கி அதிகாரிகள் யார் யார் என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. தனியார் மற்றும் மத்திய அரசுக்குச் சொந்தமான வங்கி அதிகாரிகள் 100 பேர்வரை இதில் சிக்குவார்கள் என்கிறார்கள். போலி நிறுவனம் தொடங்க உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் பட்டியலையும் தயாரித்து வருகிறார்கள்.
* சசிகலாவின் அண்ணன் (ஜெயராமன் – இளவரசியின் தம்பதியரின் மகன்) மகன் விவேக் வீடு, அண்ணாநகரில் உள்ள விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீடு ஆகியவையும் இந்தச் சோதனையில் சிக்கியிருக்கிறது. 2-வது நாளாக இங்கு சோதனை நடந்தது. வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் குறித்து பாஸ்கரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அப்போது, ‘அந்த நகைகளில், 100 பவுன் கொளத்தூரில் வசிக்கும் தனது உறவினருக்குரியது என்றும் கடந்த வாரம் கொளத்தூரில் பெய்த மழையையடுத்து நகையைப் பாதுகாப்பாக வைக்க இங்கு எடுத்து வந்ததாகவும்’ பாஸ்கர் கூறியுள்ளார். ‘அந்த நகை சித்ரா என்பவருக்கு உரியது; அதைக் கொடுத்து விடுங்கள்’ என்று திரும்பத்திரும்ப பாஸ்கர் கேட்டுக் கொண்டிருந்தார். ‘முழு விசாரணை முடித்த பிறகு அதுபற்றி முடிவு எடுக்கலாம்’ என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர். இதற்கிடையில், பாஸ்கர் வீட்டுக்கு வந்த சித்ரா மற்றும் அவரது உறவினர்கள், ‘அந்த 100 பவுன் நகையைத் தாருங்கள்’ என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டனர். அவர்கள் அதுபற்றி கண்டுகொள்ளவே இல்லை. இந்தப் பிரச்னை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் அவர்கள் ஒரு பதிலும் சொல்லவில்லை. இதனால், சோகமாக இருந்த சித்ரா மற்றும் அவரது உறவினர்கள் வெறுங்கையோடு வீடு திரும்பினார்கள்.
* சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமா அலுவலகத்தில் 3-வது நாளாக சோதனை நடக்கிறது. தாம்பரம் அடுத்த படப்பை மிடாஸ் ஆலையிலும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி., நமது எம்.ஜி. ஆர் நாளிதழ் ஆகிய நிறுவனங்களிலும் தி.நகரில் விவேக் சகோதரி கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் சோதனை நீடிக்கிறது. ஜாஸ் சினிமா, மிடாஸ் ஆலை, ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகிய அனைத்தும் விவேக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அதாவது, இளவரசி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இந்த நிறுவனங்கள் அனைத்தும் இயங்கிவருகின்றன. இதுவரை இதுமாதிரியான வருமான வரித்துறை சோதனையை நேரில் எதிர்க்கொள்ளாத விவேக், கிருஷ்ணப்பிரியா, ஷகிலா ஆகியோர் இந்த இரண்டு நாள் சோதனையில், விழிபிதுங்கி நிற்கிறார்கள். வருமானவரித்துறையினரின் தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பதில் அளிக்கமுடியாமல் திணறிவரும் விவேக், ஒருகட்டத்தில் ரொம்பவும் சோர்ந்துவிட்டாராம். 27-வயதில், மிகவும் குறுகிய காலத்தில் அதாவது 2015-ம் ஆண்டுக்குப் பிறகு விவேக்-கின் தொழில் வளர்ச்சி அசுரவேகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதுபோலவே இப்போது, அசுர சக்தியுடன் வருமானவரித்துறையும் சோதனையில் ஈடுபட்டுள்ளது.
இந்த ரெய்டு குறித்து டி.டி.வி.தினகரன் இன்று கூறுகையில், ”இதுபோன்ற ரெய்டுகளை 1996-ம் ஆண்டிலேயே நாங்கள் பார்த்துவிட்டோம். ஆனால், எங்களோடு பேசியவர்கள், தெரிந்தவர்கள், பழகியவர்கள் என்று குறிவைத்து இந்த ரெய்டு நடந்துள்ளது. இந்த கட்சியை காப்பாற நாங்கள் போராடுகிறோம். அம்மா வழியில் தொடர்து செயல்படுவோம். முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் உதவியாளர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் விடுகளில் ரெய்டு செய்துள்ளார்கள். அதானால்தான் உள்நோக்கம் இருக்கிறது என்று நாங்கள் மட்டுமல்ல, எங்களின் எதிர்முகாமில் இருக்கும் கட்சிகள் கூட இந்த ரெய்டை கண்டித்துள்ளன. எங்களுக்கு போதிய மன வலிமை இருக்கிறது. இந்த ரெய்டு நடவடிக்கைகளை எதிர்கொள்வோம். இப்படி எல்லாம் எங்களை மிரட்ட முடியாது. இப்படியே அரசியல் இருக்காது. காலம் மாறும். தேர்தல் வரும். அப்போது யார் டெப்பாசிட் வாங்குகிறார்கள். யார் யார் எங்கே இருப்பார்கள் என்று தெரியும். அன்று எங்கள் வலிமையை காட்டுவோம். ரெய்டுக்கு எங்கள் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம்” என்றார்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்று அடிக்கடி ஜெயலலிதா சொல்வார். இப்போது, ஜெயலலிதா இல்லை. அவரோடு 33 ஆண்டுகாலம் வாழ்ந்த சசிகலா ஜெயிலில் இருக்கிறார். சசிகலா-வின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் வருமான வரித்துறை சுற்றி வளைத்திருக்கிறது..!