பணமுடக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பு 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மாலை 7.30 வரை 500 ரூபாய் நோட்டுகள், 1000-ம் ரூபாய் நோட்டுகளை கெத்தாக பையில் வைத்துக் கொண்டு சுற்றியவர்கள், அடுத்த அரை மணி நேரத்தில் அதிர்ச்சியில் உறைந்தனர். அன்றைய தினம் எட்டு மணிக்கு பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து அந்த நோட்டுகள்செல்லாத நோட்டுக்களாக ஆகிவிட்டன.
குறிப்பிட்ட காலம் வரை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளின் வழியே மாற்றிக் கொள்ளலாம் என்றெல்லாம் மத்திய அரசு அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பொதுமக்கள் வங்கிகள், ஏ.டி.எம்-கள் முன்பு தவமாய், தவமிருந்து கிடந்தனர். பண முடக்கம் நிகழ்ந்து ஓர் ஆண்டு முடிவடைந்திருக்கிறது.
47 பேர் கைது
இந்த சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி முதல் இதுவரை சட்டவிரோதமாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது சி.பி.ஐ வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. இப்படி 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 307 பேர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 47 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 21 வங்கி அதிகாரிகள், 26 தனிபர்கள் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குழந்தைகளின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, பழையரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பலர் டெபாசிட் செய்திருக்கின்றனர். பி.ஜே.பி ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பணம் முடக்கம் அமலுக்கு வந்த சில நாட்களிலேயே, சில தனிநபர்களுக்குப் புத்தம், புதிய நோட்டுகள் கிடைத்திருக்கின்றன. எப்படி அவர்களுக்கு மட்டும் புதிய நோட்டுகள் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.
குஜராத்தில் அதிகம்
குஜராத்தில் மட்டும் சட்டவிரோதமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 200 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. குஜராத்தில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி பல இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில், பஹஜிவாலா என்ற தனியார் நிதி நிறுவன உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய நோட்டுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவர் 56 போலி வங்கிக் கணக்குகளை வைத்திருந்தார். இவர் தன்னிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை சூரத் மக்கள் கூட்டுறவு வங்கியில் கொடுத்து மாற்றி இருக்கிறார்.
100 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை ஆக்சிஸ் வங்கி மாற்றிக் கொடுத்திருப்பதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகின்றனர். அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்கன்புரா யூகோ வங்கி கிளையில் இருந்த செயல் இழந்த வங்கிக் கணக்குகளில் ஒரு கோடியே 49 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோதமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வங்கி மேலாளர் பாஸ்கர் சோனி, ப்ராஸ்வாந்த் மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விரால் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சிக்கிய அதிகாரிகள்
போஸ்ட் ஆபீஸ் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் உள்ள இரண்டு வங்கிகளில் 60.52 கோடிக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது வரை 396 கோடி ரூபாய் சட்டவிரோதப் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. சட்டவிரோதப் பணம் தொடர்பாக சி.பி.ஐ-க்கு 92 புகார்கள் வந்திருக்கின்றன. போலி ஆவணங்களைக் கொண்டு புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு, வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
வணிக, கூட்டுறவு வங்கிகளில் மட்டும் முறைகேடாக ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதாக 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போஸ்ட் ஆபீசில் மாற்ற முயன்றதாக 18 வழக்குகளும், ரயில்வேயில் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.