வடகொரியாவுக்கு அணு ஆயுத சோதனை மேற்கொள்ள போதுமான நிதியை அமெரிக்கா மற்றும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் வருகையால் திரட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடும் நிதி நெருக்கடியால் தள்ளாடும் வடகொரியா தனது அணு ஆயுத சோதனை திட்டங்களுக்கான நிதியை சுற்றுலா வருவாயில் இருந்து திரட்டுவதாக தெரிய வந்துள்ளது.
இதில் பெரும்பங்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளால் திரட்டப்படுவதாகவும், இந்த இரு நாடுகளும் மறைமுகமாக வடகொரிய ஏவுகணை சோதனைக்கு நிதி அளித்து வருவதாகவும் ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கடுமையான பொருளாதார தடை உத்தரவுக்கு பின்னரும் வடகொரியா அசராமல் இருக்க காரணம், குவியும் சுற்றுலா நிதி என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் பலவற்றுடன் நெருக்கமான பொருளாதார உறவை பேணி வரும் வடகொரியா அதன் வழியாக மில்லியன் கணக்கிலான டொலர் வருவாயை குவிப்பதாகவும்,
மட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கட்டார் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பியும் வருவாய் ஈட்டி வருகிறது.
மேலும் கம்போடியா நாட்டில் உள்ள புகழ் வாய்ந்த கற்கோயிலை சுற்றிப்பார்க்க பயணிகளால் வாங்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் தலா 10 டொலர் வடகொரியாவுக்கு நிதியாக சென்று சேர்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறாக திரட்டப்படும் நிதியை வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்த அணு ஆயுத சோதனைகளுக்காகவே பயன்படுத்தி வருவதாகவும் ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.