வீடுகளுக்கு வெதுப்பக உற்பத்திப் பொருள்களைக் கொண்டு சென்று விற்பனைசெய்யும் கலாசாரம் பெண்களை ஆரோக்கியமற்றவர்களாக்கியுள்ளது.
நாட்டில் 5 லட்சம் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுகாதாரப் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘ஆரோக்கியமான பெண்கள் ஆரோக்கியமான நாடு’ எனும் கருப்பொருளில் எதிர்வரும் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினம் கொண்டாடப்படவுள்ளது.
நாட்டின் முது கெலும்பாக உள்ள பெண்களை ஆரோக்கியமற்றவர்களாக மாற்றும் இன்னுமொரு கலாசாரம் நாடு முழுவதும் மிக மெதுவாகப் பரவி வருகின்றது. முளையிலேயே கிள்ளியெறியவேண்டும்.
நாட்டின் சனத்தொகையில் 52 சத வீதம் பெண்களே உள்ளனர். நாட்டின் பொருளாதாரத்திலும் அவர்களின் பங்களிப்பே அளப்பரியது என்பது வெளிப்படை. இவர்களுக்கு நோயாபத்துக்கள் ஏற்பட்டு அவர்கள் செயலிழந்தால் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படையக்கூடும்.
200 மில்லியன் பெண்களுக்கு நீரிழிவுத் தாக்கம் உள்ளதாக உலக சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் 5 இலட்சம் பெண்களில் நீரிழிவு தாக்கமுள்ளதாகத் தெரியவருகின்றது.
கொழும்பை எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு 18 வீதம் நீரிழிவுத் தாக்கமுள்ளது. அதிகளவாக கர்ப்ப காலத்திலேயே பெண்கள் நீரிழிவுக்குள்ளாகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஐந்தில் இருவருக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு தாக்கம் ஏற்படுவதாகவும் அதில் ஒருவர் உயிரிழக்கும் வரை இதைக் காவிச்செல்லும் நிலையும் ஏற்படுகின்றது.
பெண்கள் அதிகளவாக மாமிச உணவுகளைத் தவிர்ப்பதைக் குறைத்திட வேண்டும்.
பானங்களில் மாத்திரம் சீனியின் அளவைக் குறிப்பிடாமல், நாம் உட்கொள்ள எடுக்கும் அனைத்து விதமான உணவு வகைகளிலும் அதில் உள்ள கலோரியின் அளவைக் குறிப்பிட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அதிளவான சீனியை உள்ளடக்கிய உணவுகளுக்கு வரி செலுத்தும் திட்டத்தை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுமாறும் கேட்டுக்கொள்ளவுள்ளோம்.
எமது நாட்டில் நோயற்ற சமூகமாக மாற்றி வரும் வேளையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சுகாதார சவாலுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
இவர்களின் நுழை விசைவு நடவடிக்கையின் போது சுகாதாரப் பரிசோதனைகளுக்காகக் கட்டணம் அறவிடப்பட்டு அவர்கள் சுகாதார பரிசோதனைகளின் பின்னர் நாட்டில் பிரவேசிக்க அனுமதிக்க கோரவுள்ளோம்.
ஹோட்டல்களில் உணவு முறைகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது. அவர்கள் பொது மக்களுக்கு போசாக்கான உணவுகள் தருவிக்கிறார்களா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாம் இவற்றுடன் விளம்ப ரங்கள் குறித்தும் அவதானத்தை செலுத்தவுள்ளோம்.
பொருள்களின் தரம், அவற்றினால் ஏற்படும் பக்கவிளைவுகள், போசாக்கு மற்றும் சுத்தம் குறித்தும் எம்மால் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
2025ஆம் ஆண்டு இலங்கை வளமிக்க நாடாக மாறும் என்ற தலைமை அமைச்சரின் கூற்றுப் படி, இலங்கையை ஒரு போசாக்கான நாடாகவும் மாற்றும் செயல்திட்டங்கள் எம்மால் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.