புதிதாக தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு 2000இற்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும், கலப்பு தேர்தல் முறையின் கீழ், 25 வீதமான பெண்கள் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும்.
இம்முறை, உள்ளூராட்சி சபைகளுக்கு 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நேரடியான- வட்டார முறைத் தெரிவில், பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து போனாலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், 25 வீத பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும்.
இதன் மூலம், இம்முறை 2000இற்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
கடந்த முறை உள்ளூராட்சி சபைகளில் 82 பெண் பிரதிநிதிகளே இடம்பெற்றிருந்தனர்.
அதேவேளை, இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டிய பெண்களுக்கான குறைந்தபட்ச ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, வட்டார முறை வேட்புமனுவில் 25 வீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ வேட்புமனுவில் 50 வீதமும் பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறித்த வகையில் தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்காத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.