தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பங்காளிக் கட்சிகளை, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பாக ஒரே குடையின் கீழ் போட்டியிட வைப்பதற்கு முன்னெடுக்கப் பப்பட்ட முயற்சி சறுக்கியுள்ளது.
கட்சிகள் தத்தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தமையால் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
ஆனால், மீண்டும் ஒரு தடவை கூடிப் பேசுவதற்கு கட்சிகள் இணக்கப்பாடு வெளியிட்டுள்ளன.
மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க பலிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையின் அழைப்பில், மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பங்காளிக் கட்சித் தலைவர்களில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா மாத்திரமே கலந்துகொண்டார்.
புளொட் சார்பில் அந்தக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், அமைச்சருமான க.சிவநேசன், ரெலோ சார்பில் அந்தக் கட்சியின் செயலர் ந.சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அந்தக் கட்சியின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்திஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்களான பா.டெனீஸ்வரன், ப.சத்திய லிங்கம், பிறிமுஸ்சிராய்வா நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வடக்கு மாகாணசபை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயூரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். மன்னார் அமைப்பாளர் குமரேஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.கூட்டத்தின் ஆரம்பத்தில், ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையையும், ஒன்றாகத் தேர்தல் எதிர்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த அருட்தந்தையர்கள், உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான யாப்பு உருவாக்கப்படவேண்டும், கட்சியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட அருட்தந்தையர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, கூட்டமைப்பாகச் செயற்படுவதற்கு தமது கட்சி தடையில்லை என்பதைக் குறிப்பிட்டார். அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதற்கு இணங்க முடியாது என்றும், நாடாளுமன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தேர்தல் கூட்டமைப்பாகச் செயற்படுவதற்கு தமது கட்சி ஏற்கனவே இணக்கம் வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ரெலோ அமைப்பின் செயலர் ந.சிறீகாந்தா, தமிழ் அரசுக் கட்சியை வற்புறுத்தி இணங்க வைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். தமது கட்சிதான் தமிழ் மக்கள் பேரவையில் இணையவில்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை கட்டிக்காப்பது தாங்களே என்றும் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ்வைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் அரசுக் கட்சி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார். கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டமைப்பா இயங்குவதற்கு தமிழ் அரசுக் கட்சியே தடை ஏற்படுத்துகின்றது என்றும், நாடாளுமன்றத்தில் கூட தனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கி வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பதிலளிக்க முற்பட்டுள்ளனர். இது இரு தரப்பினரிடையேயும் வாக்குவாதமாக மாறியுள்ளது. கூட்டம் குழப்பநிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், ஆயர் தலையிட்டு கூட்டத்தைச் சமாதானப்படுத்தி நிறைவு செய்துள்ளார்.
கூட்டமைப்பை ஒற்றுமைப்படுவதற்கான முயற்சி நேற்றுத் தோல்வியில் முடிந்துள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடையே மீண்டும் சந்திப்பு நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது