கும்புறுமூலையில் எதனோல் தொழிற்சாலையை அமைப்பதற்கு அர்ஜுன் அலோசியஸிற்கு எங்கிருந்து நிதி கிடைத்தது என கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதியும், பிரதமரும் இவ்விடயத்தில் மௌனமாக இருக்காது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பியருக்கான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் எதனோல் தொழிற்சாலையை இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடு தமிழினத்தினை மதுப்பாவனையால் அழிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியாகும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவு -– செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு, -கிழக்கு மக்களின் வாக்குகளை பெற்றே வெற்றிபெற்றேன் என்று கூறுகின்றார். அதனால் தமிழ் மக்கள் மீது அவர் கரிசனை கொண்டிருப்பதாகவும் கூறுகின்றார். உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது அவர் கரிசனை கொண்டிருந்தால், அந்த மக்களுக்கு ஆகக்குறைந்தது தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வகையிலான தொழிற்சாலை ஸ்தாபிக்கும் முன்மொழிவுகள் எவற்றையும் இந்த வரவு- – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான எந்த முன்மொழிவுகளும் காணப்படாமை கவலையளிப்பதாக உள்ளது.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தேசிய கடதாசிக் கம்பனி, கும்புறுமூலை அச்சகம், தேவபுரம் அரிசி ஆலை, மண்டூர் ஓட்டுத்தொழிற்சாலை, சவளக்கடை அரிசி ஆலை என்பன இதுவரையில் இயங்காத நிலைமையிலேயே காணப்படுகின்றன. இதுபோன்று தான் வடக்கிலும் எந்தவிதமான தொழிற்சாலைகளையும் மீள இயக்குவது குறித்து முன்மொழிவுகளை செய்யவில்லை.
இத்தொழிற்சாலைகளை மீள இயக்கினால் தமிழ் பேசும் மக்கள் வாழ்வாதாரத்தில் மீண்டும் முன்னேறிவிடுவார்கள் என்பதை அரசாங்கம் நன்கறிந்துள்ளது. ஆகவே ,தான் தமிழ் பேசும் மக்களை முன்னேற விடாது தடைபோடுவதற்காகவும் அவர்களை இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் என்றுமே கைகட்டி நிற்வேண்டும் என்ற எண்ணத்திலேயே தற்போதைய அரசாங்கமும் அசமந்தமான போக்கிலேயே செயற்படுகின்றமை தெளிவாகின்றது.
தற்போது வாழைச்சேனை கடதாசி நிறுவனத்தினை மீள இயக்கும்செயற்பாட்டினை கைவிட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினை நிறுவுவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால், சிங்கள மக்களை மையப்படுத்திய எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலையை கொரியன் நிறுவனத்தின் உதவியுடன் கட்டியெழுப்ப முனைகின்றது. இவ்வாறு தான் தமிழ் மக்கள் நல்லாட்சியிலும் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கும்புறுமூலை பகுதியில் மதுபானப் பாவனை அதிகரிப்புக்காக எதனோல் தொழிற்சாலையொன்று 480மில்லியனில் கட்டப்பட்டுள்ளது. இதில் இந்தியக் கம்பனியொன்றும், அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜூன் அலோசியஸின் முதலீடும் உள்ளது. அர்ஜுன் அலோசியஸிற்கு இவ்வாறான முதலீட்டைச் செய்வதற்கான நிதி எங்கிருந்து வந்தது. இந்த தொழிற்சாலையை ஸ்தாபிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் ஏன் கூடுதல் கவனம்செலுத்துகின்றார்கள். இந்த விடயம் சம்பந்தமாக நாம் எத்தனையோ தடவைகள் சபையில் கூறியபோதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏன் வாய் திறக்கவில்லை. போதையற்ற தேசத்தினை கட்டியெழுப்புவதற்கு சிந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் 12பேர் கையொப்பமிட்டு இந்த முயற்சியை நிறுத்துமாறு கோரி கடிதம் அனுப்பியபோதும் தற்போதும் அந்த முயற்சி தொடர்ந்த வண்ணமே உள்ளது. அப்படியென்றால் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் முக்கியமல்ல. வருமானம் மட்டுமா முக்கியம்? அதனை எந்த வழியிலும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்களா?
அம்பாறையில் தோல் உற்பத்தி செயற்பாட்டிற்கு பௌத்த பிக்குகள் எதிர்ப்புத் தெரிவித்ததும் 300கோடிக்கான திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், எதனோல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அப்படியென்றால், தமிழருக்கு ஒரு சட்டம் பௌத்தர்களுக்கு ஒரு சட்டமா முன்னெடுக்கப்படுகின்றது. அதேநேரம் மட்டக்களப்பில் தோல் தொழிற்சாலையை தாபிப்பதற்கு சில முயற்சிகள் நடைபெறுவதாக நாம் அறிகின்றோம். அதற்கும் நாம் இடமளிக்கப்போவதில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா விடுதிகள் தவிர இருபதிற்கும் குறைவான மதுபான நிலையங்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 67நிலையங்கள் இருக்கின்றன. இதனால் இம்மாவட்டத்தில் மட்டும் 400மில்லியன் நிதி வருமானமாகப் பெறப்பட்டு வெளிக்கொண்டு செல்லப்படுகின்றது. ஆனால் ,மாவட்ட அபிவிருத்திற்காக 360 மில்லியன்களே ஒதுக்கப்படுகின்றன. வறுமை நிலையில் 19ஆவது இடத்தில் உள்ள இந்த மாவட்டத்தினை மேலும் சிதைப்பதற்கு முனையாதீர்கள்.
எதனோல் தொழிற்சாலையை உடனடியாக நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பியருக்கான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு எதனோல் தொழிற்சாலை இயக்கப்படுமாகவிருந்தால் பாடசாலை மாணவர்கள் கூட மதுபாவனையில் அதிகமாக ஈடுபடும் நிலைமையே ஏற்படும். அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதானது யுத்தத்திற்கு பின்னர் தமிழர் பகுதிகளில் மதுப்பாவனையை அதிகரிக்கச் செய்து மறைமுகமாக தமிழினத்தினை அழிக்க முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.