கடந்த நான்கு நாட்களாக சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.
சுமார் 190 க்கும் மேற்பட்ட இடங்களில்,1800 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
இன்றும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த அதிரடி சோதனை எப்படி நடத்தப்பட்டது? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில், ஏன் சசிகலா குடும்பத்தினரை மட்டும் அவர்கள் விட்டு வைத்துள்ளனர்? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதற்கு பதில் தரும் விதமாக, இந்த சோதனை அமைந்துள்ளது என்று டெல்லி வட்டாரத்தில் கூறுகின்றனர்.
இப்படி ஒரு அதிரடி சோதனை நடத்த பலத்த முன்னேற்பாடுகள் தேவை.
கடந்த மூன்று மாதங்களாக, சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர்.
இந்த அதிரடி சோதனையின் பின்னணியில் இருப்பவர், மத்திய அரசின் நிதித் துறை செயலாளர் “ஹஷ்முக் ஆதியா” என்கின்ற மூத்த அதிகாரி.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.
வருமான வரித்துறை சோதனைகள் அனைத்தும், இவரது உத்தரவின்படி தான் நடக்கும்.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கீழ் ‘ஹஷ்முக் ஆதியா’ இயங்கினாலும், சில நேரங்களில் அவரிடம் கூட சொல்லாமல், மோடிக்கு மட்டும் சோதனை விவகாரம் குறித்து தகவல் சொல்வார்.
அந்த அளவிற்கு ஹஷ்முக் ஆதியாவிற்கு மோடியிடம் நெருங்கிய தொடர்பு உள்ளது.
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப் போவது குறித்து முடிவெடுத்தது இவர் தான்.
இந்த அதிரடி வருமான வரி சோதனை விவகாரத்தை, தமிழக முதல்வர் எடப்பாடிக்கும், துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும், டில்லி மேலிடம் முன்னதாகவே சொல்லி இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.