தமிழக அரசியலில் இப்போது நடப்பதுபோன்ற குழப்பங்கள் அதிரடியான சம்பவங்கள் இதற்கு முன் நடந்திருக்குமா என்பது தெரியவில்லை. 3 நாட்கள் 189 இடங்கள் 2000 அதிகாரிகள் என தமிழகத்தில் வருமான வரித்துறை சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தி பரபரப்பு ஏற்படுத்திவருகிறார்கள். நேற்றுவரை அதிகார மையத்தின் அருகில் படோடோபமாக இருந்தவர்கள், இன்று எல்லாக் கதவுகளும் அடைபட்டவர்களாக பரிதவித்து நிற்கிறார்கள். கட்சியில் இப்படியெல்லாம் எதிர்காலத்தில் குழப்பங்கள் நேரும் என தெரிந்திருந்ததாலோ என்னவோ, ஆச்சர்யமாக ‘அபாய அறிவிப்பு’போல 2012 ம் ஆண்டு நடந்த கட்சியின் பொதுக்குழுவில் கதைஒன்றை சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.
தமிழகத்தில் கதை சொல்லி அரசியல் பிரசாரம் செய்யும் பாணியை அதிகம் கடைபிடித்தது ஜெயலலிதா. கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி ஜெயலலிதா அந்த பொதுக்குழுவில் சொன்ன மல்யுத்த வீரன் கதை ஆச்சர்யமாக இன்று அவரது கட்சியில் நிகழ்ந்துவரும் குழப்பங்களுக்கு அசரீரியாக அன்று சொன்னதுபோல் உள்ளது.
பொதுக்குழுவில் அவர் சொன்ன கதை இதுதான்…..
“ஒற்றுமையை பேணுங்கள், கழகம் நமக்கென்ன செய்தது என்பதைவிட கழகத்திற்காக நாம் என்ன செய்தோம்? என்பதை கருத்தோடு நினைத்துப் பாருங்கள்.
ஒரு பெரிய மல்யுத்த வீரன் களம் இறங்கிய போட்டிகளில் எல்லாம் எதிரிகளை துவம்சம் செய்து வெற்றிகளைக் குவித்து வந்தவன், ஒரு முறை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனது ஐந்து விரல்களும் ஒன்றோடு ஒன்று நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று பெருமை பேசிக் கொண்டிருந்தன. கட்டைவிரல் சொன்னது ”ஐந்து விரல்களிலும், அதிமுக்கியமான விரல் நான்தான். என்னை கழித்துவிட்டுப் பார்த்தால் மொத்த கைக்குமே மரியாதை இருக்காது. அதனால் தான் ஏகலைவனிடம் துரோணாச்சாரியார் கட்டை விரலை காணிக்கையாக கேட்டார்” என்று பெருமை பேசியது.
உடனே ஆள்காட்டி விரல் சொன்னது. ”உலகத்தில் ஒரு மனிதனுக்கு நல்லது கெட்டது எது என சுட்டிக்காட்டுகிற நான்தான் உயர்ந்தவன்” என்றது. உடனே நடுவிரல் சொன்னது ”போங்கடா முட்டாள்களே! ஐந்து விரல்களையும் ஒன்றாக்கிப் பார். எல்லோரையும் விட உயர்ந்து நிற்பவன் நான்தான். அதனால் நான் தான் அதனால் உயர்ந்தவன்” என்றது.
அடுத்து பேசிய மோதிர விரலோ ”முத்து, பவளம், வைரம், வைடூரியம் என நவரத்தினங்களையும் அணிவித்து அழகுபார்க்கிற விலை மதிப்பில்லாத விரல் நான் தான். அதனால், நான் தான் உயர்ந்தவன்” என்றது. ஆனால், கடைசியில் சுண்டு விரல் என்னதான் சொல்லப் போகிறது என்று பார்த்தால், அது சொன்னது” எல்லாம் வல்ல இறைவனின் முன் நின்று சாஷ்டாங்கமாய் வழிபாடு புரிகிறபோது இறைவனின் கடாட்சம் முதலில் இருக்கக்கூடிய சுண்டு விரலாகிய எனக்குதான் கிடைக்கும். எனவே, நான் தான் பாக்யசாலி, நான் தான் உயர்ந்தவன்” என்றது.
இப்படி, ஐந்து விரல்களும் ”நீ பெரியவனா? நான் தான் பெரியவன்” என்று பெருமை பேசிக் கொண்டிருந்தபோது அந்த ஐந்து விரல்களுக்கும் சொந்தமான மல்யுத்த வீரனை இதுதான் தருணம் என காத்திருந்த எதிரி ஒருவன் தாக்க முயற்சித்தான். அப்போது, ஐந்து விரல்களும் விழித்துக் கொண்டு ஒன்றாகி எதிரியை ஓங்கி அடிக்கவே வீழ்ந்து போனான் எதிரி.
ஆக, இந்த கதை சொல்லும் நீதி போல, என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு விதத்திலும் உயர்வானவர்கள்தான், திறமைசாலிகள்தான். நீங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து கடமையாற்றுகின்றபோது நம் கழகத்தை வெல்வதற்கு இவ்வுலகத்தில் ஓர் இயக்கம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுங்கள்” – இப்படி குட்டிக்கதை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார் ஜெயலலிதா.