கைவிலங்கிட்டு அழைத்து வரவேண்டிய ஒரு கைதியைச் சுதந்திரமாக உலவ விட்டனர் பொலிஸார். பொலிஸாருக்கு ஸ்டார் ஹோட்டலில் ரூம்கள் போட்டுக் கொடுத்ததோடு, மொடல் அழகிகளையும் அனுப்பி வைத்தான் சுகாஷ்.
திகார் சிறையிலிருந்து விசாரணைக்கு வெளியே அழைத்து வரப்பட்ட இடத்தில் பொலிஸாருக்கு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டுக்கொடுத்து சல்லாபிகள் சப்ளையும் செய்து கொடுத்துவிட்டு காதலியுடன் ஹாயாக ஷொப்பிங் சென்று வந்து பெங்ளூருவையே கலக்கி இருக்கிறான் இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் இடைத்தரகர் சுகாஷ்.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவன் சுகாஷ் சந்திரசேகர். 27 வயதாகும் இவன் மீது இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன.
அதில் ஒன்றுதான் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தருவதாகக் கூறி டி.டி.வி.தினகரனிடம் 60 கோடி ரூபா இலஞ்சம் பெற்று தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு கொடுக்க முயன்றதான வழக்கு.
அதாவது கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தலைமை ஏற்கவே, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்ததோடு கட்சியை விட்டும் வெளியேறினார்.
இதனால் அ.தி.மு.க இரு அணிகளாகப் பிளவுபட்டது. இதனிடையே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவே இரு அணிகளும் தங்களுக்கே இரட்டை இலைச் சின்னத்தை தரவேண்டும் என கோரிக்கை விடுத்தன. இதன் காரணமாக இரட்டை இலைச்சின்னத்தை முடக்கியது தேர்தல் கமிஷன்.
அப்போது தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி டி.டி.வி.தினகரனிடம் சுகாஷ் 60 கோடி ரூபா பேரம் பேசி இருப்பதாக டெல்லி குற்றப்பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லி ஹயாத் ஹோட்டலில் தங்கியிருந்த சுகாஷ் சந்திரசேகரை பொலிஸார் ஏப்ரல் 16 ஆம் திகதி இரவு கைதுசெய்தனர்.
அவனிடமிருந்து 1.30 கோடி ரூபாவை பொலிஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தினகரன் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகாஷை பல்வேறு வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு மும்பை, கோவை, பெங்களூரு நீதிமன்றங்களுக்கு ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை அழைத்து வந்தனர்
டெல்லி சிறப்புப்படை பொலிஸாரான 3 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தலைமைக் காவலர்கள் ஜீவன், ஜோர்ஜ், காவலர்கள் நிதிஷ்குமார், கேசவ்குமார், தர்மேந்தர் மற்றும் புஷ்பேந்தர் ஆகியோர்.
ஆனால் கைவிலங்கிட்டு அழைத்து வரவேண்டிய ஒரு கைதியை ஹாயாக உலவ விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திருக்கின்றனர் பொலிஸார்.
காரணம் செல்லும் இடங்களில் எல்லாம் தனக்கு பாதுகாப்பாக வந்த டெல்லி பொலிஸாருக்கு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்ததோடு சில மொடல் அழகிகளையும் அனுப்பி வைத்திருக்கிறான் சுகாஷ்.
இதனால் குடியும் குடித்தனமுமாக ஹோட்டல் அறையில் கூத்தடித்த பொலிஸார் சுகாஷைச் சுதந்திரமாக உலவ விட்டு விட்டனர்.
இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சுகாஷ். தனது காதலி லீனா மரியபவுலுடன் ஜாலியாக ஷொப்பிங் சென்று வந்திருக்கிறான்.
மேலும் தனது தொழில் பார்ட்னர்களைத் தொடர்பு கொண்டு பல்வேறு டீலிங்குகளையும் முடித்திருக்கிறான். மும்பை, கோவையில் இவனது நடவடிக்கைகளைப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும் நுண்ணறிவுப் பிரி வுப் பொலிஸாரும் கண்காணிக்கத் தவற விட்டநிலையில் பெங்களூருவில் ஆதாரத்துடன் வருமான வரித்துறையிடம் சிக் கிக் கொண்டான்.
இதையடுத்து பெங்களூருவில் சுகாஷ் நடத்திய கூத்தை டெல்லி பொலிஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிடம் விரிவான அறிக்கையாகச் சமர்ப்பித்தது வருமான வரித்துறை.
இதன் தொடர்ச்சியாக மேற்படி 7 பொலிஸாரையும் ஒக்டோபர்19 ஆம் திகதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் பொலிஸ் கமிஷனர்.
இதன் பிறகு நடைபெற்ற விசாரணையில் சுகாஷ் உட்பட பொலிஸார் அனைவரும் ஸ்டார் ஹோட்டலில் தங்கியதும் சுகாஷ் தனது காதலி லீனாவுடன் பெங்களூரு மோலில் ஷொப்பிங் செய்தது உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததும் தனது தொழில் பார்ட்னர்களுடன் பேசியதும் நிரூபணமானது.
இதன் தொடர்ச்சியாக சப் இன்பெக்டர் ராஜேஷ் உட்பட 7 பேரையும் பணிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் டெல்லி பொலிஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்.