மெகா ரெய்டு : இபிஎஸ்,ஓபிஎஸ்ஸுக்கு உலைவைத்த தினகரன்!

கடந்த நான்கு நாட்களாக சசிகலா குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்கள்,அவர்களது ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 187 இடங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில்,வருமான வரித்துறை சோதனைகளை தைரியமாக சந்திப்போம் என்று தெரிவித்துள்ள தினகரன், மொட்டை அடித்துக் கொண்டு திருப்பதியில் சேகர் ரெட்டியுடன் நின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மெகா ரெய்டுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

“தற்போது நடைபெறும் மெகா ரெய்டு தேவையா என்பது முடிந்த பிறகுதான் தெரியும். எடப்பாடிக்கும்,பன்னீர்செல்வத்திற்கும் நெருக்கமான அரசியல் பிரமுகர் ஒருவரிடம் இருந்து தான் ரெய்டு செல்ல வாகனங்களை எடுத்துள்ளனர். அதற்காக ஆலோசனை நடந்த ஓட்டலிலும் அவர் இருந்திருக்கிறார். எனவே, இந்த சோதனை திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

ரெய்டு நடந்த இடங்களில் வருமான வரித்துறையினர் யாரையும் அச்சுறுத்தவில்லை, கண்ணியமாகவே நடந்து கொண்டனர். சங்கர், ராஜ மவுலி படங்களைப் போல பிரமாண்டம் காட்டவே 180 இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளனர். என் வீட்டில் எந்த பாதாள அறையும் இல்லை. எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை.

வருமான வரித்துறையினர் மெகா ரெய்டு நடத்தியும் எதையும் கைப்பற்றவில்லை. எனது வீடு மற்றும் மனைவியிடம் இருந்து ஆவணம் சிக்கியிருந்தால் மட்டுமே நான் பதில் சொல்ல வேண் டும். மற்றபடி நண்பர்கள், உறவினர்கள், நான் சாப்பிடும் ஓட்டல்களில் ரெய்டு நடத்தினால் அதற்கு அவர்கள்தான் பதில் சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் எல்லாரும் வரி செலுத்துபவர்கள்.

எனது வீட்டில் பாதாள அறையில் வைரங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அது போன்ற அறையும் இல்லை, வைரங்களும் இல்லை. கற்கண்டுகளை வைரம் என்றால் நான் பொறுப்பல்ல.

எங்களுக்கு அநியாயம் இழைத்தவர்களை மக்கள் மன்றத்தில் தோற்கடிப்போம். நான் காந்தியின் பேரனும் இல்லை. அதே நேரத்தில், கோட்சேவின் வழித் தோன்றலும் இல்லை. வருமானவரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை.

சேகர் ரெட்டி கான்ட்ராக்டராக உருவாக காரணமானவர்கள், மொட்டை அடித்துக் கொண்டு திருப்பதியில் அவருடன் நின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஜெயலலிதா மருத்துவ சிகிச்சையின் போது அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் எடுக்கப்பட்ட வீடியோ என்னிடம் தான் இருக்கிறது. வருமான வரி சோதனையின் போது, அதையாரும் எடுத்துச் செல்லவில்லை. அதை எடுத்து செல்வதற்காக இந்த சோதனை நடத்தப்பட வில்லை. விசாரணை ஆணையத்தில் கேட்டால் அந்த வீடியோ பதிவை கொடுக்கப்போகிறேன். ஆனால் அதை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனைகள் வைத்து கொடுக்க தயாராக இருக்கிறேன்.

அற்பர்களுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பார்கள் என்பதை போல, அமைச்சர்கள் பேசுகின்றனர். சி.வி.சண்முகம் எப்படி சீட் வாங்கினார் என்பதை, பாண்டிச்சேரிக்கு செல்லாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நாங்கள் இருக்கக்கூடாது, நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். எங்களுக்கு பயம் என தமிழிசை சவுந்திர ராஜன் சொல்கிறார். வருமானவரி சோதனையால் எந்தவித பயமும் கிடையாது. இந்த சோதனைகளை தைரியமாக சந்திப்போம். அதன் தொடர்ச்சியாக கைது நடவடிக்கை எடுத்தால் சட்டப்படி சந்திப்போம். இந்த சோதனையால் எங்களை நிற்கவைத்து சுட்டுவிட முடியாது.”

இவ்வாறு அவர் கூறினார்.