ஒரே கட்சி சின்னம்: மல்லுக்கட்டும் கமல், ரஜினி!

அரசியல் களத்தில் கால்பதிக்க தயாராகும் நடிகர்கள் கமளும் ரஜினியும் ஒரே கட்சி சின்னத்தை குறி வைத்து காய்கள் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் பெயர் என்ன என்பதை இன்னும் முடிவு செய்துகொண்டிருக்கும் கமல், தன் கட்சியின் சின்னம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

கமல் தன் கட்சிக்காக இப்போது தெரிவு செய்து வைத்திருக்கும் சின்னம் விசில். விசில் என்றால் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை செய்தல், புறப்படுவதற்கும், நிறுத்துவதற்குமான ஒரு வினைச் சொல்லே பெயர்ச் சொல்லாகியிருப்பதுதான் விசில்.

அந்த வகையில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து, வெள்ளத்துக்கு எதிராக விழிப்புணர்வு குரல் கொடுத்து, கொசஸ்தலை ஆற்று பிரச்னையில் எச்சரிக்கை குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் கமல்,

தன்னையே ஒரு விசில் ஆக கருதிக்கொண்டிருக்கிறார். எனவே, தனது கட்சியின் சின்னமாக விசில் இருந்தால் அது மிகவும் எளிதானது என்றும், பொருத்தமானது என்றும் கருதுகிறார்.

ஆனால் இந்த விசில் சின்னத்தின் மீது ரஜினியும் ஏற்கெனவே ஒரு கண் வைத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் தற்போது தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனைகளில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன்.

இவர் ரஜினியிடம் இந்த விசிலை நீங்கள் எடுத்து அடித்தால் அதன் ஒலி தமிழ்நாடு எங்கும் தங்குதடையின்றி பரவும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார்.

விசில் சின்னம் தொடர்பில் வியந்த ரஜினி, தனது ஆரம்ப கால கண்டக்டர் வாழ்வில் விசில் அடித்தே தன் பயணம் தொடங்கியதையும்,

இப்போது விசில் மூலம் தனது வாழ்க்கையில் இன்னொரு பயணம் தொடங்க இருப்பதையும் மிக உணர்ச்சிவசப்பட்டு பரவசத்தோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஆனால், இப்போது விசிலை கமல் முதலில் ஊதும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறார். மாநிலக் கட்சியாக பதிவு செய்யும் பட்சத்தில் விசில் சின்னத்தைக் கேட்டு கமல், ரஜினி இருவரில் யார் வேண்டுமானாலும் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கலாம், இதில் முந்துபவர்களுக்கே விசில்.