கொடூர காதலன்…!! பிளஸ்–2 மாணவி உயிருடன் எரித்துக் கொலை!

கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்சேரிப்புதூரை சேர்ந்தவர் கமலா (வயது 75). இவருடைய பேத்தி ஜான்சிபிரியா (17). இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் பாட்டி கமலா வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் செல்வகுமார் (22). விசைத்தறி தொழிலாளி. செல்வகுமாரும், ஜான்சிபிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

இவர்களுடைய காதல் விவகாரம் தெரிந்த கமலா இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது. தனது பாட்டிக்கு காதல் வி‌ஷயம் தெரிந்து விட்டதால் வாழ்க்கையில் எப்படி ஒன்று சேர போகிறோம் என்று ஜான்சிபிரியா மனவேதனையுடன் காதலன் செல்வகுமாரிடம் தெரிவித்தார். மேலும் செல்வகுமாரின் குடும்பத்தினரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

susideஇந்த நிலையில் நேற்று காலை கமலா அருகே உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்று விட்டார். வீட்டில் ஜான்சிபிரியா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த காதலன் செல்வகுமார், நாம் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வோம் என்று வீட்டில் தூக்கு கயிற்றை கட்டினார். அவரிடம், தூக்குப்போட்டால் கழுத்து இறுகி செத்து விடுவது பயமாக இருக்கிறது என்று ஜான்சிபிரியா கூறி இருக்கிறார்.

இதைதொடர்ந்து மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று செல்வகுமார் கூறி உள்ளார். முதலில் மண்எண்ணெய்யை ஊற்றி ஜான்சி பிரியா மீது தீவைப்பது என்றும், எரியும் தீயில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொள்ளலாம் என்றும் செல்வகுமார் கூறியுள்ளார். இதை ஜான்சிபிரியா ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஜான்சிபிரியா மீது செல்வகுமார் மண்எண்ணெய் ஊற்றினார். பின்னர் தீப்பெட்டி யை பற்ற வைத்து அவர் மீது வீசினார். இதில் கண் இமைக்கும் நேரத்தில் ஜான்சிபிரியாவின் உடலில் தீப்பற்றி மளமளவென்று பரவி எரிந்தது. இதனால் வலியால் அலறிதுடித்தபடி அவர், காதலனை நோக்கி ஓடிவந்தார். அதைப்பார்த்து பதறிப்போன செல்வகுமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதற்கிடையே தீ உடலில் பற்றியதால் அங்கும், இங்கும் ஓடி ஜான்சிபிரியா அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

காதலியை உயிருடன் எரித்து கொன்ற செல்வகுமாரை பிடிக்க நெகமம் போலீசார் பல இடங்களில் அவரை தேடினார்கள். இந்த நிலையில், சுல்தான்பேட்டை அருகே இடையர்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருந்த செல்வகுமாரை இரவில் போலீசார் கைது செய்தனர். கைதான அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியை உயிரோடு காதலன் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.