சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரி சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது. ரெய்டு நடந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று கூறிக்கொண்டே செஞ்சி அருகேயுள்ள பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு திரும்பியுள்ளார் டி.டி.வி.தினகரன்.
கடந்த வியாழக்கிழமை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலா குடும்பத்தினர், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் தொடர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ரெய்டு குறித்து தினகரனோ, எங்கள் வீட்டிலுள்ள பச்சைகுழந்தை முதல் வயதான எங்கள் அப்பா வரை யாரும் பயப்பட மாட்டோம் என்று தில்லாக தனது காலரை தூக்கிவிட்டு பேட்டி தருகிறார்.
எங்கெங்கோ ரெய்டு நடக்கிறது ஆனால் என்னுடைய வீட்டில் ரெய்டு நடக்கவேயில்லை. நான் பூஜை செய்கிறேன் என்று தனது வீட்டில் கோ பூஜை முடித்தது செய்து விட்டு பேட்டி கொடுத்தார் தினகரன். மேலும் அவர் தன்னுடைய பண்ணை வீட்டில் சாணியும், உரமும்தான் கிடைக்கும் என்றார்.
இந்த ரெய்டின் முக்கிய நோக்கம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய உயிலையும், அவரது சிகிச்சை வீடியோவையும் தேடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. டி.டி.வி.தினகரனுக்கு மனதிற்குள் உதறல் எடுத்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமலேயே பேட்டி தருகிறார்.
சமீபத்தில் சசிகலா பரோலில் வந்த போது தங்கிய இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீடு மற்றும் விவேக் ஜெயராமன் வீடும் தான் ரெய்டு வளையத்தில் வசமாக சிக்கியுள்ளது. அவர்களது வீட்டில் தான் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த பரபரப்பான சூழலில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செம்மேடு எனும் கிராமத்திலுள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு தன் மனைவி, மகளுடன் தினகரன் சென்று தரிசனம் செய்துள்ளார்.
அங்கு சிறப்பு பூஜை முடிந்ததும் டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்தாருடன் கோவிலை வலம் வந்து சுமார் 15 நிமிடம் கோவிலில் இருந்துவிட்டு யாருடனும் பேசாமல் அவர்கள் காரில் சென்னை புறப்பட்டு சென்றனர். இந்த பிரத்தியங்கரா தேவி கோவிலானது டிடிவி.தினகரனுக்கு சொந்தமானதாகும்.
டி.டி.வி. தினகரன் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று இந்த பிரத்யங்கிரா கோவிலுக்கு சென்று மிளகாய் யாகம் நடத்தினார். அங்குள்ள பிரத்யங்கிரா தேவிக்குச் சிறப்பு பூஜைகள், மிளகாய் போட்டு சுமார் ஒருமணி நேரம் ஹோமம் செய்தார்.
பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டு யாகம் நடத்தினால் வெற்றி கிட்டும் என்றும் மிளகாய் யாகம் வளர்த்தால் எதிரி அழிந்து போவார்கள் என்பதும் நம்பிக்கை.
இந்த நிலையில் தற்போது டி.டி.வி.தினகரன் கோவிலுக்கு சென்று வழிபட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பயந்துட்டியா குமாரு? என்று கேட்கின்றனர் அவரது எதிர்ப்பாளர்கள்.