அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பித்துப் பிடித்த கிழவர் என வட கொரிய அரசாங்க ஊடகம் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் தனது டுவிட்டர் இணையத்தளப் பக்கத்தில் செய்தியொன்றை நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
“ நான் அவரை (வட கொரிய தலைவர் கிம் யொங் – உன்னை) குள்ளமானவர் என்றோ கொழுத்தவர் என்றோ ஒருபோதும் அழைத்திராத நிலையில், அவர் ஏன் என்னை கிழவர் என அழைத்து அவதூறு செய்கிறார்?” என டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் இணையத்தளப் பக்கத்தில் தன்னால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வட கொரிய தலைவருடன் நட்பை ஏற்படுத்த கடுமையாக முயற்சித்து வருவதாகவும் ஒருநாள் தாம் நண்பர்களாக மாறக்கூடும் என நம்புவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்தார்.
கொரிய அரசாங்க ஊடகமான கொரிய மத்திய செய்தி முகவர் நிலையம் அன்றைய தினம் மேற்படி செய்தி வெளியாவதற்கு முன்னர் வெளியிட்ட பிறிதொரு செய்தியில் டொனால்ட் ட்ரம்பின் ஆசிய பிராந்தியத்துக்கான விஜயம் தொடர்பில் குற்றஞ்சாட்டியிருந்தது.
டொனால்ட் ட்ரம்ப் உலக சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்துபவராகவும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போரொன்றை ஆரம்பிக்க கெஞ்சுபவராகவும் உள்ளார் என அந்த செய்தியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
தமது அரசாங்கத்திடமிருந்து மக்களை ஒதுக்கிவைப்பதற்கான முயற்சியை ட்ரம்ப் மீண்டும் முன்னெடுத்துள்ளதாக வட கொரிய வெளிநாட்டு அமைச்சர் அந்த செய்தியில் குற்றஞ்சாட்டியுள்ளார். வட கொரியா முழுமையான அணு ஆயுத நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுப்பதை டொனால்ட் ட்ரம்ப்பால் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை என அவர் கூறினார்.
அதேசமயம் டொனால்ட் ட்ரம்ப் வட கொரிய தலைவர் கிம் யொங் – உன்னிற்கு நேரடியாக விடுத்த செய்தியில், “ நீங்கள் உடமையாகப் பெறும் அணு ஆயுதங்கள் உங்களுக்கு பாதுகாப்பை அளிக்கப் போதில்லை. மாறாக அவை உங்கள் ஆட்சியை மரணப் புதைகுழியில் தள்ளுவதாக அமையும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.