எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று திருநெல்வேலியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பேசிய ஓபிஎஸ்,”தமிழக மக்களின் இதயங்களில் மக்கள் திலகமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போலவே வாரி வழங்கி, ஒரு அட்சயப் பாத்திரமாக ஜெயலலிதா இருந்தார்.
தமிழ் மக்களின் மனங்களில் மறக்க முடியாத மாபெரும் தலைவராக எம்.ஜி.ஆர் வாழ்ந்து வருகிறார்.
தமிழக மக்கள், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை “ராமச்சந்திர ஜெயந்தியாக” கொண்டாடி வருகின்றனர்” என்று பேசினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓபிஎஸ் பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர் என்று அனைவராலும் கருதப்பட்டது.
சசிகலாவை ஓபிஎஸ் எதிர்த்தபோது, அதற்கும் காரணம் பாஜகத்தான் என்று தகவல் வெளியானது.
அதனோடு, ஓபிஎஸ்-எடப்பாடி அணிகள் இணைவதற்கும் காரணம் பாஜகத்தான் என்று கூறப்படும் நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மக்கள் “ராமச்சந்திர ஜெயந்தியாக” கொண்டாடுகின்றனர் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, திராவிடக் கட்சிகள் பிறந்தநாள் விழாவை “ஜெயந்தி விழா” என்று கொண்டாடாத நிலையில், வழக்கத்திற்கு மாறாக “ராமச்சந்திர ஜெயந்தி” என்னும் ஓபிஎஸ்-ன் பேச்சு அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.