வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, அவரது குடும்பத்தை வாட்டி வதைக்கும் வருமான வரித்துறை சோதனையால் மிகுந்த பதட்டத்துடன் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து பரப்பன அக்ரஹார சிறை வட்டாரங்கள் கூறியதாவது: சசிகலா கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் நள்ளிரவு 1: 00 மணி வரை தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து செய்திகளை பார்த்து கொண்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை அன்று காலை சிறையிலுள்ள நூலகத்திற்கு வந்து தமிழ் பத்திரிகைகளை தீவிரமாக படித்தார். அவருடன் இளவரசி வந்து இருந்தார். சில நாட்களாகவே சசிகலா மிகுந்த பதட்டமாக காணப்பட்டார்.
எப்பொழுதும் வழக்கமாக சசிகலாவும், இளவரசியும் இரவு 8:00 மணிக்கு எல்லாம் தங்களது இரவு உணவை முடித்து விட்டு 9:00 மணிக்கு படுக்க சென்று விடுவர்.
ஆனால், தற்போது அதில் பெரிய மாற்றம் காணப்படுகிறது. நேற்று காலை சரியாக 10:00 மணிக்கு சசிகலா நூலகத்திற்கு வந்தார். தமிழ் பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களை, சுமார் 90 நிமிடங்கள் வரை படித்தார். அதனையடுத்து தனது அறைக்கு சென்று விட்டார்.
பின்னர் அங்கு இளவரசியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதனையடுத்து அவர்கள் இருவரும் சில கடிதங்களை எழுதினர். இவ்வாறு சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தது.