ஐ.டி சோதனையின் போது விவேக் வீட்டில் இருந்து கேட்ட பெண்ணின் கதறல் குரல்: அதிர்ச்சியடைந்த மன்னார்குடி கும்பல்.!!

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

சுமார் 190 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், 5 வது நாளாக நேற்று நுங்கம்பாக்கத்தில் விவேக் வீட்டில் சோதனை தொடர்ந்து நடைபெற்றது.

சோதனை தொடங்கிய நாளிலிருந்து இந்த வீட்டில் இருந்த யாரையும் வெளியே விடவில்லை. அதனோடு, புதிதாக யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.

அந்த வீட்டிற்குள் விவேக், அவரது மனைவி கீர்த்தனா, இளவரசியின்சகோதரர் மகன் பிரபு மட்டுமே இருந்துள்ளனர்.

விவேக் வீட்டிற்கு வெளியே அதிக அளவில் அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர்.

விவேக் மாமனார் பாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்து முடிந்துவிட்டது.

அவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை முடிந்ததும், பாஸ்கர் கிளம்பி விவேக் வீட்டிற்கு வந்துவிட்டார்.

யாரையும் விவேக் வீட்டிற்குள் அதிகாரிகள் அனுமதிக்காததால், வீட்டு வாசலிலேயே ஒரு சேரைப் போட்டு அமர்ந்திருந்தார் பாஸ்கர்.

விவேக்கைப் பார்க்க வந்த ஆதரவாளர்கள் பாஸ்கரிடம் விசாரித்துவிட்டு சென்றார்கள்.

நேற்று மதியம் விவேக் வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டைத் தாண்டி வெளியே கேட்டுள்ளது.

வீட்டிற்குள் இருக்கும் ஒரே பெண் விவேக் மனைவி கீர்த்தனாதான்.

வெளியே இருந்த விவேக் உறவினர்களும், ஆதரவாளர்களும் இதைக் கேட்டு டென்ஷன் ஆகிவிட்டனர்.

பூட்டப்பட்டிருந்த விவேக் வீட்டு கேட்டை அனைவரும் சேர்ந்து தட்டியுள்ளனர்.

“உள்ளே என்னங்கடா பண்றீங்க… எங்க புள்ளைங்களை வெளியே அனுப்புங்க…’ என ஆக்ரோஷமாகக் கத்த ஆரம்பித்தனர்.

சில நிமிடங்களில், வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த இளவரசியின் சகோதரர் மகன் பிரபு, கேட்டில் இருந்த முகம் பார்க்கும் ஜன்னலைத் திறந்து, ‘தயவு செய்து எல்லோரும் அமைதியா இருங்க.

கீர்த்தனாதான் அழுதுட்டு இருக்கு. உள்ளே எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்க சத்தம் போட்டீங்கன்னா உள்ளே இருக்கிறவங்க டென்ஷன் ஆகுறாங்க.

உங்களை கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக்குறேன். அமைதியா இருங்க…, என கலங்கிய கண்களுடன் சொல்லிவிட்டு மறுபடியும் வீட்டுக்குள் போய்விட்டார்.

வீட்டிற்கு வெளியே இருந்த விவேக் மாமனார் பாஸ்கர், ‘நாலு நாளா புள்ளைங்களை என்ன சித்ரவதை செய்யுறாங்களோ தெரியலை.

அவங்க சோதனை பண்ணட்டும்… உள்ளே இருக்கிற மூணு பேருமே 30 வயசுக்குள்ள இருக்கிற புள்ளைங்கதான்.

அவங்களை இவ்வளவு தொந்தரவு செய்யணுமா? எனக்குத் தெரிஞ்சு, அவங்க என்ன நினைக்கிறாங்களோ.., அதில் கையெழுத்து வாங்காமல் என் மருமகனை வெளியே விட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

அதற்காகத்தான், இவ்வளவு தொந்தரவு கொடுக்குறாங்க.. என்று அங்கே இருந்தவர்களிடம் புலம்பியிருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு விவேக் வீட்டில் சோதனை முடிந்து அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் சம்மந்தமான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.