ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட சசிகலாவுக்குத் தொடர்புடைய 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாள்களாக நீடித்த இந்தச் சோதனை, நேற்று மதியம் 3 மணியளவில் நிறைவடைந்தது.
சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வும் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனுமான விவேக்கை, வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
நேற்று நடந்த விசாரணை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விவேக், ‘’ஐந்து நாள்களாக வருமான வரிச்சோதனை நடந்தது. 2015-ம் ஆண்டு முதல் ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஒ-வாக இருக்கிறேன். ஜெயா டிவியையும் இரண்டு ஆண்டுகளாக நிர்வகித்துவருகிறேன். எனவே, ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் தொடர்பான கேள்விகள் கேட்டனர். ஆவணங்களைச் சரிபார்த்தனர். இந்நிறுவனங்களின் கணக்குவழக்குகளைப் பற்றி கேள்வியெழுப்பினர். பின்னர், என் மனைவியின் நகைகள் பற்றி கேட்டனர். அவை, திருமணத்தின்போது வாங்கிய நகைகள். மீண்டும் என்னை விசாரணைக்கு அழைப்பார்கள். முழு ஒத்துழைப்புடன் பதிலளிக்கத் தயார். வருமான வரித்துறை அதிகாரிகளின் கடமையைச் செய்தார்கள். வரி கட்டவேண்டியது என் கடமை. அதை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். இது, சாதாரண சோதனைதான். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால், முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’’ என்றார் ரிலாக்ஸாக.