விவேக்குக்கு இவ்வளவு சொத்து சேர்ந்தது எப்படி?

விவேக்குக்கு இவ்வளவு சொத்து சேர்ந்தது எப்படி? - பரபரப்பு தகவல்கள்

சென்னை:

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இளவரசியின் மகன் விவேக் வீட்டில்தான் அதிகபட்ச ஆவணங்கள் கிடைத்தன.

இதனால் விசாரணை அதிகாரிகளின் பார்வை முழுமையாக விவேக் மீது திரும்பியுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை அதிரடி சோதனையைத் தொடங்கியபோது அனைவரது பார்வையும் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதுதான் இருந்தது. ஆனால் தினகரனின் சென்னை வீடு, புதுச்சேரி எல்லையில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் இரண்டே நாட்களில் சோதனை முடிவுக்கு வந்துவிட்டது.

அதன் பிறகும் விவேக், கிருஷ்ணபிரியா வீடுகளில் சோதனை நீடித்தது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் இருவரது வீடுகளில் கிடைத்த ஆயிரக்கணக்கான ஆவணங்கள்தான்.

அந்த ஆவணங்களைப் பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள், “27 வயதுக்குள் விவேக்கால் எப்படி இவ்வளவு சொத்துக்களை சம்பாதிக்க முடிந்தது?” என்ற சந்தேகமும் ஆச்சரியமும் அடைந்தனர். குறிப்பாக 11 தியேட்டர்கள் கொண்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாஸ் காம்ப்ளக்சை வாங்கியது எப்படி என்று அதிகாரிகள் திகைத்துப் போனார்கள்.

ஏராளமான போலி நிறுவனங்கள், வங்கி லாக்கர்களும் விவேக், கிருஷ்ண பிரியாவை சுற்றியே உள்ளன. இதன் மூலம் வருமான வரித்துறை நடத்திய 5 நாள் மெகா ரெய்டில் முழுமையாக சிக்கி இருப்பது விவேக், கிருஷ்ண பிரியா இருவர் மட்டுமே என்று தெரிய வந்துள்ளது.

இளவரசியின் மகன், மகளான இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வளவு சொத்துகள் இல்லை. விவேக்கின் இந்த திடீர் வளர்ச்சிக்கு ஜெயலலிதா அவர் மீது காட்டிய அபரிதமான பாசமே அடிப்படையாக அமைந்துள்ளது. இவரை படிக்க வைத்து ஆளாக்கியதே ஜெயலலிதாதான். அதற்கும் ஒரு காரணம் உள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் மிகப் பெரிய திராட்சை தோட்டமும் ஒரு பங்களாவும் உள்ளது. அந்த திராட்சை தோட்டத்தை பராமரிக்கும் பொறுப்பை சசிகலாவின் சகோதரர் ஜெயராமனிடம் ஜெயலலிதா ஒப்படைத்து இருந்தார்.

இதனால் ஜெயராமன் தனது மனைவி இளவரசி (தற்போது பெங்களூர் சிறையில் 4 ஆண்டு தண்டனையை அனுபவித்து வருபவர்) மற்றும் மகன் விவேக், 2 மகள்கள் கிருஷ்ணபிரியா, வைசாலியுடன் ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் வசித்து வந்தார். 1991-ம் ஆண்டு திராட்சை தோட்டத்தில் மின் இணைப்பு பணிகளை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி ஜெயராமன் உயிரிழந்தார்.

இதனால் இளவரசி மகன், மகள்களுடன் தவிப்புக்குள்ளானார். இதை அறிந்த ஜெயலலிதாவுக்கு இளவரசி மீதும், அவரது குழந்தைகள் மீதம் அனுதாபமும், இரக்கமும் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ முடிவு செய்த ஜெயலலிதா, அவர்களை சென்னைக்கு வரவழைத்து தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஒரு பகுதியில் தங்கிக் கொள்ள சொன்னார்.

வேதா இல்லத்துக்குள் நுழைந்த பிறகு இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியாவை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அவர்களோடு மிகவும் பாசத்தோடு பழகினார். அதோடு அவர்களை நன்றாக படிக்கவும் வைத்தார்.

சென்னையில் கல்லூரி படிப்பை முடித்ததும், விவேக்கை ஜெயலலிதா ஆஸ்திரேலியா நாட்டுக்கு அனுப்பி உயர் படிப்பு படிக்க வைத்தார். படிப்பு முடிந்து திரும்பிய விவேக் சில மாதங்கள் கொல்கத்தாவில் உள்ள ஐ.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு அந்த வேலையை உதறி விட்டு, ஜெயலலிதாவுக்கு உதவியாக மாறினார்.

போயஸ் கார்டன் வேதா இல்லத்தை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை விவேக் முதலில் ஏற்றார். அவர் மீது கொண்ட பாசத்தால் அவருக்கு ஜெயலலிதா மேலும், மேலும் முக்கிய பொறுப்புகளை வழங்கினார். அதன்படி இளம்வயதிலேயே ஜெயா டி.வி.யின் நிர்வாக இயக்குனர் பொறுப்பை ஏற்றார்.

இதைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தினர் செய்து வந்த பல்வேறு தொழில்களில் விவேக் இடம் பெற்றார். 2015-ம் ஆண்டு ஜாஸ் சினிமாஸ் வளாகம் வாங்கப்பட்டது. அந்த ஜாஸ் சினிமா காம்ப்ளக்சின் தலைமை செயல் அதிகாரியாக விவேக் பொறுப்பு ஏற்றார்.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு மன்னார்குடி குடும்பத்தினரில் விவேக் ‘கை’ ஓங்கியது. நிறைய தொழில்களில் அவர் பங்குதாரராக சேர்க்கப்பட்டார். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை போல திகழ்ந்ததால் விவேக் மீது அரசு உயர் அதிகாரிகளுக்கும் சற்று பயம் இருந்தது.

இந்த அந்தஸ்து காரணமாகத்தான் விவேக் மாபெரும் எழுச்சிப் பெற்றதாக கூறப்படுகிறது. மிக, மிக குறுகிய காலத்தில் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்கள் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

அவரது வீட்டில் சிக்கிய ஆவணங்கள் மூலம் சுமார் 100 நிறுவனங்களில் விவேக் முக்கியப் பங்கு வகிப்பதில் இருந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகளின் மெகா ரெய்டில் விவேக்கை முதன்மையாக குறி வைத்தே சோதனைகள் நடந்தன.

குறிப்பாக ஜெயலலிதா சொத்துகள், உயில்கள் விவேக் வசம் இருக்கும் என்ற கோணத்தில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் பல நூறு கோடி ரூபாய் சொத்துகளுக்கு அவர் அதிபதியாகி இருக்கும் ஆவணங்களே அதிகாரிகளுக்கு கிடைத்தது.

அந்த ஆவணங்கள் விவேக்கை சிக்க வைக்கும் வலையாகி விட்டது.