இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய சிலர் விரைவில் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கனடிய மத்திய அரசின் எதிர்க்கட்சியில் வெளிவிவகாரங்களுக்கான நிழல் பிரதியமைச்சராக விளங்கும் கானெட் ஜேனஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் வன்கூவர் நகரில் விரைவில் நடைபெறவுள்ள 2017ம் ஆண்டுக்கான சமாதான பாதுகாப்பு அமைச்சரவை மாநாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் சமூகத்தின் பல பிரதிநிதிகளை நான் சந்தித்து உரையாடியதிலிருந்து, போர்க்குற்றங்களைப் புரிந்துள்ள சிலர் விரைவில் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிந்து கவலையடைகிறேன்.
அண்மையில் கொன்சவ்வேட்டிவ் கட்சி ‘சேர்க்கி மக்நிற்ஸ்க்கி சட்டம்’ அதாவது வெளிநாடுகளில் தவறிழைத்த அரச பிரதிநிதிகளால் பாதிப்படைந்தோருக்கு நீதி வழங்கும் சட்டமூலத்தை அறிமுகம் செய்தது.
கொன்சவ்வேட்டிவ் கட்சியின் இந்த முக்கியமான சட்டமூலத்திற்கமைய, மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த வெளிநாட்டு அரச பிரதிநிதிகளையும் அதிகாரிகளையும் கனடிய அரசாங்கம் தடை செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவில் மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சேர்க்கி மக்நிற்ஸ்க்கி பெயரில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், இந்த சட்டமூலம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
எனவே, விரைவில் நடைபெறவுள்ள 2017ஆம் ஆண்டுக்கான சமாதான பாதுகாப்பு அமைச்சரவை மாநாட்டிற்கு வருகைதரத் திட்டமிட்டுள்ளோரின் தரவுகளை, கனடிய அரசு முழுமையாக ஆராய வேண்டும்.
அவர்களில் யாராவது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் ஈடுபட்டிருக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தால் அதனை கவனத்தில் எடுத்து, அப்படியானோர் மீது மக்நிற்ஸ்க்கி சட்டமூலத்தை சரியாகப் பயன்படுத்துமென நான் எதிர்பார்க்கிறேன்.
ஏற்கனவே கனடிய அரசு, இத்தகைய சட்டமூலத்தைப் பாவித்து, ரஸ்யா, வெனிசுவேலா, தென்-சூடான் போன்ற நாடுகளிலிருந்து வருகை தரவிருந்த சில மனித உரிமை குற்றச்செயல் புரிந்தோரை தடைசெய்தமை வரவேற்கத்தக்கது.
எனினும், இன்னும் அதிகம் இந்த சட்டமூலம் தொடர்பில் கனடிய அரசு கவனம் செலுத்தவேண்டுமென்று நான் நம்புகிறேன்.
இந்த சட்டமூலத்தினுள் அகப்படாது தப்பிக்கொண்டோரில், ரஸ்ய மத்திய அரசின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி லிற்விநெக்கோவைப் படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் டிமிற்றி கொவ்டுன் மற்றும் அந்ரேய் லுகொவொய் ஆகியோரும் அடங்குவர்.
கொன்சவ்வேட்டிவ் கட்சியால் கொண்டுவரப்பட்ட மக்நிற்ஸ்க்கி சட்டமூலத்தின் கீழ், உரிய சட்டங்களை மீறுகின்ற அனைத்து உறுப்பினர்களும் தடைசெய்யப்பட வேண்டுமென்பதே எங்களது நிலைப்பாடு.
இந்நிலையில், இலங்கையில் அடிப்படை மனித உரிமை, நீதி, நல்லிணக்கம் போன்றவை சரியாக நிலைநிறுத்தப்பட, கொன்சவ்வேட்டிவ் கட்சி தொடர்ந்தும் குரல்கொடுக்கும்.” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.