தமிழகம், கர்நாடகா, புதுவையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை தமிழகத்தையே பரபரப்பாக்கியது.
பல இடங்களில் நேற்றுடன் சோதனை நிறைவடைந்த நிலையில், ஒரு சில இடங்களில் 6வது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில், நவம்பர் 9ம் தேதி அதாவது கடந்த வாரம் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கிய சோதனை, நேற்று வரை நீடித்தது.
சோதனை தொடங்கியது முதல், பல தகவல்கள் உடனுக்குடன் வெளியாகின. உண்மையில் வெளியான தகவல்களுக்கும், நிதர்சனமான உண்மைக்கும் எந்த அளவுக்கு இடைவெளி இருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்..
அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலா என்ற ஒரே ஒரு மையப் புள்ளியை அடிப்படையாக வைத்து அவருடைய உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகம், அவர்களுக்கு உதவியவர்கள் என 187 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு என எத்தனையோ தகவல்கள் வெளியாகின. தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் 187இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 1,800 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அனைத்துப் புள்ளி விவரங்களும் அதையே மேற்கோள் காட்டின.
ஆனால், உண்மையில் இந்த அதிரடி சோதனையில் 1,800 அதிகாரிகள் ஈடுபடவில்லை என்றும், அவ்வளவு ஏன், இதில் பாதி அதிகாரிகள் கூட சோதனையில் ஈடுபடவில்லை என்றும் கூறுகிறார்கள். உண்மையான எண்ணிக்கை வெறும் 600 முதல் 650 அதிகாரிகள்தான் என்கிறது உண்மை நிலவரம்.
அடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையே. ஆனால், புதுச்சேரியின் ஆரோவில்லில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டில் பாதாள அறைகள் இருந்ததாக வெளியானது உண்மையான தகவல் இல்லை என்றும் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் முக்கியப் பங்காற்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொதுவாக ஒரு சோதனைக்கு இரண்டு அதிகாரிகளும், இரண்டு சாட்சிகளும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதே போல 187 இடங்களில் சோதனை நடந்தது மட்டும்தான் உண்மை. இதில் 600 முதல் 650 பேர் தான் ஈடுபட்டனர். ஊடகங்களில் வெளியானது போல 1,800 பேர் அல்ல” என்கிறார்.
இதில், சிரிப்பாக சிரிக்கும் ஒரு தகவலையும் அதிகாரி பகிர்ந்து கொண்டார். அதாவது, கொடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையே செய்யவில்லை. ஆனால், கொடநாடு எஸ்டேட்டில் தொடர்ந்து சோதனை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது என்றார்.
நூறு கோடிக்கும் மேற்பட்ட மதிப்பு கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது உண்மை. வருமான வரித்துறை சோதனை நடத்திய இடங்களின் 3 உரிமையாளர்கள் மற்றும் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
அதாவது, இளவரசியின் மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம், அதிமுக கர்நாடக மாநில செயலர் புகழேந்தி, பூங்குன்றம் மற்றும் மருத்துவர் சிவக்குமார் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், ஜாஸ் சினிமா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் 3 பேர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர்.