இலங்கையின் மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம், கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் அம்பவம் இன்றைய தினம் மதியம் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் இன்று காலை குறித்த மாணவர், தனது 11 நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.
நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த மாணவர் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார். நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த அவரை ஏனைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் பயனளிக்காத நிலையில் மேற்படி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதனையடுத்து, மாலை கினிகத்தேனை பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த மாணவரின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் உயர்தரம் கல்வி கற்கும் 18 வயதான விரோஜன பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு இதுகுறித்த விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.