மத்திய கிழக்கு நாடுகளில், கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல கொடூரமான மோதல்களை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ எனும் சர்வதேச மருத்துவ அமைப்பு மருத்துவமனையின் வார்டுகளில் உள்ள நோயாளிகளின் காயங்கள்.
காயமடைந்த இராக்கியர்கள், சிரியா மக்கள் மற்றும் ஏமானியர்களுக்கு சிகிச்சையளித்து வரும் இந்த அமைப்பு, பிசியோதெரப்பி,மேம்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் மனநல சுகாதார சேவைகளையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து வயதினரும் அடங்கிய 4,500 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சையளித்துள்ளனர்.
அவர்களில் 9 பேரின் கதைகள் இங்கே.
ஷம்ஸா
சிரியாவில் உள்ள அலெப்போவில் வசித்து வந்த ஷம்ஸா, அவர் வீட்டில் வெடிகுண்டு தாக்கிய போது குடும்பத்துடன் இரவு உணவு உட்கொண்டிருந்தார்.
“எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது வழக்கம். அந்த தருணங்கள் எங்களுக்கு மிகவும் பிடித்தமானவை. நாங்கள் மொத்தம் 5 சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளதால் அந்த கணங்கள் எப்போதும் அமைதியாக இருக்காது” என்றார் அவர்.
அந்த குண்டுவெடிப்பு சம்பவம், அவரது குடும்ப நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, அவரது முகத்தையும் எரித்தது.
சுவடுகளை சரிசெய்ய உதவும் வகையில் கூடுதல் சருமத்தை வளர்க்க அவரது கழுத்தில் திசுப் பெருக்கியை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பொருத்தியுள்ளனர்.
ஆய்ஷா
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஆய்ஷாவின் செல்லப் பெயர் ஆயோஷ். இவருக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும் மற்றும் மருத்துவமனைக்கு வெளியே செல்லும் போது பலூன்கள் மற்றும் ரோஜாப் பூக்களை சேகரிப்பதும் பிடிக்கும்.
ஒரு மெழுகுவர்த்தி தீயால், அவரது முகம் மற்றும் இடக்கை பாதிக்கப்பட்டபோது, இவர் ஆறு மாத குழுந்தை.
சுவடுகளை குறைத்து செயற்கைக் கை பொருத்துவதிற்காக இந்த மருத்துவ அமைப்புக்கு இவர் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னால், ஏமனில் நான்கு அறுவை சிகிச்சைகளை ஆய்ஷா மேற்கொண்டிருந்தார்.
“ஆயோஷ் தொடர்ந்து பொறுமையாக முன்னேறி, தற்போது மேம்பட்டு விளங்குகிறார்” என்கிறார் அவரது தந்தை.
யூசெஃப்
பாக்தாதை சேர்ந்த யூசெஃபுக்கு மோட்டர்பைக் மீது ஆதீத பிரியம் உண்டு. ஒரு நாள் அந்தி சாயும் வேலையில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று அவர் வாகனத்தை திருடி, அவர் உடலுக்கு தீ வைத்தது.
கண்ணத்தை அவர் கழுத்திற்க்கு பற்றவைக்கும் அளவிற்க்கு, அந்தத் தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் யூசெஃப். பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு 17 வயதான இவரால் தற்போது தானாகவே சாப்பிட, குடிக்க மற்றும் உடை அணிந்துக் கொள்ள முடிகிறது.
தாக்குதலையடுத்து முதல் முறையாக சமீபத்தில் அவர் மோட்டர்பைக் ஓட்ட ஆரம்பித்துள்ளார்.
கட்டாடா
2015ம் ஆண்டில் ஏமன் நாட்டின் ஏடனில் உள்ள ஒரு சுரங்கத்தின் மீது தன் வாகனத்தை ஏற்றிய போது, கார் இருக்கையில் இருந்து தூக்கியெறியப்பட்டார் கட்டாடா.
ஒரு காலை இழந்த அவருக்கு ஏமனில் உள்ள மருத்துவமனையில் மற்றொரு காலும் அகற்றப்பட்டது.
இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டது.
நரம்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு தற்போது அவரால் தானாகவே உடை மாற்றிக் கொள்ள முடிகிறது.
அவருக்கு ஏற்பட்ட காயங்களைத் தொடர்ந்து மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்த அவரது மனைவியும், அவரும் ஒரு நாள் மேற்கு நோக்கி செல்லப் போகும் நம்பிக்கையோடு உள்ளனர்.
மனால்
கெர்கூக்கின் வடக்கில் உள்ள ஒரு நகரத்தில், 2015ம் ஆண்டு நடந்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஈராக்கைச் சேர்ந்த மனால் காயமடைந்தார்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமிய அமைப்பினர்,ஹவிஜா நகரத்தை கைப்பற்றியபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக மனாலும், அவரது தாய் மற்றும் இரண்டு சகோதரர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
11 வயதான மனாலுக்கு ஓவியம் வரைவது, கதைகள் கூறுவது மற்றும் கிட்டார் வாசிப்பது மிகவும் பிடிக்கும்.
இந்த மருத்துவ அமைப்பில் அவர் நிறைய நண்பர்களை உருவாக்கியிருக்கிறார்.
முஹமத்
“வெடிகுண்டுகளுக்கு முகம் பார்க்கத் தெரியாது. மனிதர்கள், விலங்குகள் என அனைத்தையும் அது கொல்லும்” என்கிறார் சிரியாவை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலைக் கொண்ட 23 வயதான முஹமத்.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம், ஹோம்ஸ் வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலால் அவரது கண்ணம் கிழிந்து பற்கள் உடைந்தன.
அவரால் பேச முடியாமல் போனது மற்றும் உணவு உண்ணும் போது ஏற்படக்கூடிய வலி மிகவும் வேதனைக்குறியதாக இருந்தது.
35 அறுவைசிகிச்சைகளுக்கு பின் அவர் ,”என்னால் தற்போது பேசவும் சாப்பிடவும் முடிகிறது. நம் கணவுகளை நாம் உணரலாம் என்பதை கற்றுக்கொண்டேன்” என்கிறார்.
எல்லையற்ற மருத்துவ அமைப்பு மருத்துவமனையில் அவர் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். அவை “90 சதவீதம்” சிறந்ததாக உள்ளது.
தன் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மற்றும் அவரது ஆடுகளையும் காண சிரியா செல்வதற்க்கு காத்துக் கொண்டிருக்கிறார் முஹமத்.
இப்ரஹீம்
ஏமனைச் சேர்ந்த இப்ரஹீம் 2015ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு சனாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து தப்பிச் சென்றார்.
அவரது பாட்டி வீட்டில் இருந்த, வடிகால்களை திறக்க உதவும் அமிலத்தை அருந்தியதால் காயமடைந்தார்.
அமிலத்தால் அவரது வாய் எரிந்து, உதடுகள் இணைந்ததால் இப்ரஹீமால் பேசவோ திட உணவு உட்கொள்ளவோ முடியாமல் போனது.
பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு, இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக தற்போது நான்கு வயதான இவரால் வாயை திறக்க முடிகிறது.
இப்ரஹீமின் தந்தை அவருக்கு மீண்டும் பேசக் கற்றுக் கொடுத்து வருகிறார்.
வா இல்
கால்பந்து வீரரான ஏமனைச் சேர்ந்த வா இல் இதுவரை 28 அறுவைசிகிச்சைகளை பெற்றுள்ளார். அதாவது ஆண்டு ஒன்றுக்கு ஓரு அறுவைசிகிச்சை.
முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலிஹிற்க்கு எதிரான 2011ம் ஆண்டு எழுச்சியில் இவர் காயமடைந்தார்.
போராட்டங்களுக்கு மிகுந்த வேகத்துடன் காவல்துறையினர் பதிலளிக்க, தனது கைகள், கால்கள், முதுகு மற்றும் முகத்தில் மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டார் வா இல்.
“தாக்குதலுக்கு பின், என் முகம் பாதிக்கப்பட்டிருந்ததால் எங்கும் செல்லாமல் என் வீட்டு அறையிலேயே இருந்தேன். ஆனால் பல அறுவை சிகிச்சைகளாலும், இங்கிருந்த மக்களாலும் நான் வெளியே வந்து பல நண்பர்களை உருவாக்கிக் கொண்டேன்.”
மீண்டும் முகம் மற்றும் கைகளை அவரால் அசைக்க முடிகிறதோடு கால்பந்தும் விளையாடுகிறார்.
அமல்
ஈராக்கைச் சேர்ந்த தையற்காரரான அமல், தனது பாட்டியுடன் சிலப் பொருட்களை வாங்க சென்ற போது கிர்கூக்கில் நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் காயமடைந்தார்.
“என் மார்பில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்ற போது என் கைககளை மிக மோசமாக எரித்துக் கொண்டேன். நான் மருத்துவமனைக்கு சென்றடைந்த போது என் கழுத்து எனது மார்பு பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்தது” என்கிறார் அவர்.
சொந்த மகனால் கூட தன்னை அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார் இந்த 23 வயதான பெண்மனி. பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு தற்போது உடைகளை பின்னத் தொடங்கியிருக்கும் இவர், ஈராக்கில் உள்ள உறவினருக்கு ஆடை தைத்துக் கொண்டுள்ளார்.
இவை மார்ட்டா பெல்லிங்க்ரெரியால் எடுக்கப்பட்ட பேட்டிகள்.